PulseNews
தொழில்நுட்பம்

உலகம் ஏன் வண்ணமயமாகத் தெரிகிறது? மனித மூளை பல லட்சம் வண்ணங்களை உருவாக்குவது எப்படி?

ஆப்பிளின் ‘பளபள’ சிவப்பாகட்டும், கடலின் ‘ஆழமான’ நீலமாகட்டும். உலகம் ஏன் இத்தனை நிறங்களால் ஜொலிக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நாம் பார்க்கும் இந்த வண்ணமயமான உலகத்திற்குப் பின்னால் மிகப்பெரிய 'கூட்டணி' செயல்படுகிறது. ஆம், ஒளி (Light), நமது கண்கள் மற்றும் மூளை ஆகிய மூன்றும் இணைந்து நடத்தும் ஒரு அறிவியல் நாடகம் இது. வண்ணங்களின் ‘ஹீரோ’ யார் தெரியுமா? எல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளி 'ஒளி' தான். சூரிய ஒளியைப் பார்க்கும்போது வெள்ளையாகத் தெரியும். ஆனால், அது ஒரு ஏமாற்று வேலை. உண்மையில் வானவில்லின் அத்தனை வண்ணங்களையும் அது தனக்குள் மறைத்து வைத்துள்ளது. ஒரு பொருள் மீது ஒளி படும்போது, அது சில நிறங்களை உறிஞ்சிக்கொள்ளும், சிலவற்றை மட்டும் வெளியே தள்ளும் (பிரதிபலிக்கும்). அப்படித் தள்ளப்பட்ட நிறம் நம் கண்ணில் படும்போதுதான், "ஓ! இது சிவப்பு ஆப்பிள், இது நீல வானம்" என்று நமக்குத் தெரிகிறது. கண்ணுக்குள் இருக்கும் 3 'மந்திரவாதிகள்' நமது கண்ணுக்குள் ‘கூம்பு செல்கள்’ (Cones) என்ற ஒரு சிறப்பு அமைப்பு இருக்கிறது. மனிதர்களாகிய நமக்கு இதில் 3 முக்கிய வகைகள் உள்ளன: சிவப்பைத் தேடும் கண்கள். பச்சையைப் பார்க்கும் கண்கள். நீலத்தை ரசிக்கும் கண்கள். இந்த சிவப்பு, பச்சை, நீலம் (RGB) என்ற 3 வகை செல்களும் சேர்ந்து போடும் கூட்டணிதான், நாம் பார்க்கும் பல லட்சம் வண்ணங்கள். மென்மையான ரோஜா நிறம் முதல், 'பளிச்' என்ற ஊதா நிறம் வரை அனைத்தும் இவர்களின் கைவண்ணமே. கண்கள் வெறும் கேமரா மட்டும் தான்; உண்மையான 'டைரக்டர்' நம் மூளைதான். கண்கள் பார்வை நரம்புகள் (Optic nerve) வழியாக மூளைக்கு "இதோ சிக்னல்" என்று செய்தியை அனுப்பும். மூளைதான் அந்தச் செய்தியைப் படித்து, இது பச்சை, இது மஞ்சள் என்று வண்ணங்களை உருவாக்கி நமக்கு காட்டுகிறது. ஒருவேளை மூளை மட்டும் குறுக்கிடவில்லை என்றால்? உலகம் வெறும் ஒளியாகத் தெரியுமே தவிர, அதில் எந்த வண்ணமும் இருக்காது. புல்லும் வானவில்லும் ஒரே மாதிரி தெரிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அழகு மட்டுமல்ல, அது ஒரு மொழி! வண்ணங்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகள். சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே 'ஆபத்து' என்று மூளை அலறுகிறதல்லவா? அது தீயாக இருந்தாலும் சரி, டிராஃபிக் சிக்னலாக இருந்தாலும் சரி. ஒரு பழம் பழுத்துவிட்டதா, சாப்பிடுவதற்குத் தயாரா என்பதை அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும். சில நிறங்கள் மனதை அமைதிப்படுத்தும், சில உற்சாகப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், படைப்பாற்றல், படிப்பு, பேச்சு என நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வண்ணங்களே இயக்குகின்றன.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உலகம் ஏன் வண்ணமயமாகத் தெரிகிறது? மனித மூளை பல லட்சம் வண்ணங்களை உருவாக்குவது எப்படி?
PulseNews சுருக்கம்

உலகம் ஏன் இத்தனை வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது என்பது குறித்து எப்போதாவது யோசித்ததுண்டா? ஆப்பிளின் சிவப்பு நிறம் முதல் கடலின் நீல நிறம் வரை நாம் காணும் இந்த வண்ணமயமான உலகத்தின் பின்னணியில் ஒளி, கண்கள் மற்றும் மூளை ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு உள்ளது.

இதற்கு அடிப்படையான காரணி ஒளியாகும். சூரிய ஒளி பார்க்கும்போது வெண்மையாகத் தெரிந்தாலும், அது வெறும் மாயையே தவிர, அதன் பின்னணியில் ஒரு அறிவியல் நிகழ்வு ஒளிந்திருக்கிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology