ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வெடித்த சர்ச்சை...! தவெக அரசின் நிலைப்பாடு என்ன...? - டி.டி.வி.தினகரன் கேள்வி
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக தவெக அரசு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு குறித்து சட்டசபையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்த கருத்துக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"தமிழர்களின் பாரம்பரியத்துடனும் பண்பாட்டுடனும் காலம் காலமாக பின்னிப் பிணைந்துள்ள வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாக சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டசபையில் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து கார் வழங்க முடிவு செய்த தவெக அரசு, அதேபோன்று தனது சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக அந்த முடிவை சட்டசபையில் முன்வைத்தது.உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மூலமாகவே ஜல்லிக்கட்டு குறித்து இத்தகைய இழிவான கருத்து சட்டசபையில் பதிவு செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சி செய்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுதிரண்டு நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கான பாரம்பரிய உரிமை மீட்டெடுக்கப்பட்டது. மக்களின் உணர்வோடும் உரிமைப் போராட்டத்தோடும் தொடர்புடைய ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது, இந்த விவகாரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழர்களின் வீரம், பண்பாடு மற்றும் விவசாய வாழ்வியலின் அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா என்பதை அக்கட்சியின் தலைமை வெளிப்படையாக விளக்க வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காக போராடிய தமிழக மக்களின் உணர்வுகளையும் பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையில் சட்டசபையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை சட்டப்பேரவைத் தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அத்துடன், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அந்த கருத்துகளை சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் திரும்பப் பெற வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு தனது அறிக்கையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க தவெக அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு குறித்து சட்டப்பேரவையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்த கருத்துக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தவெக கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். தமிழர்களின் பண்பாட்டோடு தொடர்புடைய இந்த விளையாட்டில் அரசு கொண்டுள்ள அணுகுமுறை குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.