”பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது”; மதத்தின் பெயரால் உரிமைகள் பறிக்கப்படுகிறதா?
கேரளாவில் இஸ்லாத்தின் முக்கிய மதகுருவான காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முலியார், பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற 'ஹப்புல் ரசூல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபூபக்கர், ”பெண்கள், ஆண்களுக்கு இணையாகப் பொதுவெளிகளுக்கோ அல்லது பொது மேடைகளுக்கோ வரக்கூடாது. அவ்வாறு வருவது பெரும் அழிவை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், ”பெண்கள் தங்கத்தைப் போன்றவர்கள், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு தங்க நெக்லஸை சாலையோரத்தில் வைத்தால், வழியில் வரும் பலரும் அதைத்தொட்டு விட்டுச் செல்வார்கள். அதனால் அந்த நெக்லஸின் அழகு கெடுவதோடு, அதற்குப் பாதுகாப்பும் இல்லாமல் போகும். அது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், பெட்டிக்குள் பூட்டி வைக்க வேண்டும். அதைப்போலவே பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், பெண்கள் தங்களது கண்ணியத்தைக் காக்க, புர்கா அணிந்து முழு உடலையும் மறைக்க வேண்டும் எனத் திருக்குரான் கூறுகிறது. இந்த கட்டுப்பாடு பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கு அல்ல. மாறாக அவர்களைப் போற்றி பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்டது” என்று பேசியிருந்தார். மத குருவின் இந்த கருத்துக்கள், பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு எதிராக இருப்பதாக, அரசியல் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதத்தின் பெயரால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முன்னதாக, இசுலாமிய அமைப்பான ’சமஸ்தா கேரள ஜம்இய்யதுல் உலமா’ சார்பில் மதராஸா மற்றும் மத நிகழ்ச்சிகளில் பெண்கள் பொது மேடைகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதன் பொதுச்செயலாளரான அபூபக்கர் எனும் மதகுருவின் இந்தப் பேச்சு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நடைபெற்ற 'ஹப்புல் ரசூல்' நிகழ்ச்சியில் பேசிய இஸ்லாமிய மதகுரு காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முலியார், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெண்கள் ஆண்களுக்கு இணையாக பொது இடங்களுக்கோ அல்லது பொது மேடைகளுக்கோ வருவது பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
பெண்களைத் தங்கத்திற்கு ஒப்பிட்டுப் பேசிய அவர், அவர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மதத்தின் பெயரால் பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக இந்தக் கருத்துக்களுக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.