திமுகவுக்கு அதிர்ச்சி.. 5 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு தவெக குறி? ஆட்சியை பலப்படுத்த விஜய் அடுத்தகட்ட அதிரடி நகர்வு!
2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், தற்போது திமுகவைச் சேர்ந்த சிட்டிங் எம்எல்ஏக்கள் மீதும் தவெக கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. தவெக ஆட்சிக்கு காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. இருப்பினும், எதிர்காலத்தில் கூட்டணி ஆதரவை மட்டுமே நம்பியிருக்காமல், சட்டசபையில் தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தவெக தலைமையின் திட்டமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் அதிமுகவில் இருந்து இன்னும் பல எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வர தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாகவே பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், அவர்களில் கணிசமானவர்களை தங்கள் பக்கம் கொண்டு வர தவெக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி அதிருப்தியை பயன்படுத்திக் கொள்ள தவெக தரப்பு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தற்போது தவெகவின் கவனம் திமுக பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் தேர்தல் தோல்விக்கு பிறகு அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம், நிர்வாகிகளை மாற்றும் நடவடிக்கைகள் என கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் அமைச்சர்களின் ஆதிக்கம் மற்றும் கட்சிக்குள் நடைபெறும் பதவி மாற்றங்களால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் குறித்த தகவல்களை தவெக தரப்பு சேகரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் முதல்கட்டமாக ஒரு முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 5 திமுக சிட்டிங் எம்எல்ஏக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்களிடம் நடத்தப்பட்டதாக கூறப்படும் பேச்சுவார்த்தையில் கட்சி மாறுவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் ஒரு தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது திமுகவிடம் 59 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அந்த கட்சியில் இருந்து சில எம்எல்ஏக்கள் தவெகவுக்கு சென்றால் அது சட்டசபை கணக்கில் திமுகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும். அதேநேரத்தில், தவெகவின் ஆட்சிப் பலத்தையும் அது கணிசமாக அதிகரிக்கக்கூடும். இதற்கிடையே திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ளதால், அங்கு நடைபெறக்கூடிய இடைத்தேர்தலையும் தவெக முக்கியமாக எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டசபை பலத்தை மேலும் அதிகரிப்பதுடன், மாற்றுக் கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வருவதன் மூலம் ஆட்சியை முழுமையாக பலப்படுத்த தவெக கணக்கு போட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திமுகவின் 5 சிட்டிங் எம்எல்ஏக்களும் தவெகவின் குறியில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அறிவாலய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த 5 பேரின் பெயர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அக்கட்சியில் இணைந்த நிலையில், தற்போது திமுகவின் 5 சிட்டிங் எம்எல்ஏக்களைத் தன்பக்கம் ஈர்க்க தவெக திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது ஆட்சியை உறுதிப்படுத்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெறவும் தவெக முயற்சித்து வருகிறது. இந்த அதிரடி நகர்வுகள் திமுக தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.