PulseNews
அரசியல்

கர்நாடக பந்த் டி.கே. சிவகுமாரின் தூண்டுதல்; கொதிக்கும் பி.ஆர். பாண்டியன்

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தூண்டுதலில் கர்நாடகப் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில், கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் சூழலிலும், தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. குறுவைச் சாகுபடியை இழந்த விவசாயிகள், அடுத்து வரவிருக்கும் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் இல்லாமல் மனமுடைந்து, செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர். இந்த நிலையில், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் 15 தினங்களுக்குத் தண்ணீரைத் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட மேலாண்மை ஆணையத்திற்குப் பரிந்துரை செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையமும், கர்நாடக அரசு உடனடியாகத் தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மறுத்து, கர்நாடக முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில் அங்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்காத சூழலிலும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் உள்ள பேராசிரியர்கள், நீரியல் ஆய்வாளர்கள் மற்றும் விவசாயிகள் மேகதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில், வாட்டாள் நாகராஜ் போன்ற இன உணர்வாளர்களைத் தூண்டிவிட்டு, கர்நாடகாவில் 'பந்த்' முழு அடைப்பு என்ற பெயரில் தமிழக மக்களுக்கு அச்சுறுத்தலை அவர் ஏற்படுத்தியுள்ளார். இந்தப் போராட்டத்தில் அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் தமிழக வாகனங்கள் கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை. ஓசூரில் இருந்து தொழிலாளர்கள் சென்று வருவதற்கான பேருந்து வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிக்கும் நோக்கத்தோடு கர்நாடக முதலமைச்சர் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனைத் தமிழக முதலமைச்சர் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக முதலமைச்சரின் சட்டவிரோதச் செயல்கள் குறித்து வழக்குத் தொடர வேண்டும். தொடர்ந்து சட்டத்திற்கு உட்பட்டுத் தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாட்டு அணை வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் விரிவான வரைவுத் திட்ட அறிக்கையைத் தயாரிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மனிதநேயமே இல்லாமல் தமிழக விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறார். தமிழகத்தில் மக்களையும் விவசாயிகளையும் அழிக்கத் துடிக்கிறார். உடனடியாக மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் கர்நாடக பந்த் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக மேகதாட்டு அணை கட்டுவதற்கும், காவிரியில் தண்ணீர் விட எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெறுகிற பந்த் போராட்டம் மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இதே நிலை நீடித்தால், தமிழக விவசாயிகள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம். மேலும், பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணல் அணை கட்டுமானப் பணியைத் தமிழக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும், அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் எனக் கூறினார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கர்நாடக பந்த் டி.கே. சிவகுமாரின் தூண்டுதல்; கொதிக்கும் பி.ஆர். பாண்டியன்
PulseNews சுருக்கம்

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தூண்டுதலின் பேரில், கர்நாடகாவில் சட்டவிரோதமாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதைக் கண்டிப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் குறுவைச் சாகுபடியை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது வரவிருக்கும் சம்பா சாகுபடி குறித்தும் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics