PulseNews
அரசியல்

எம்எல்ஏக்களுக்கு அரசு கார் வேண்டாம்; அதற்கு பதில் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்: சவுமியா அன்புமணி

தமிழகத்தில் எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் காரை பெற வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் விஜய், எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்றும், கார் பராமரிப்பு மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட செலவுகளுக்காக கூடுதல் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். தமிழக அரசு நிதிச்சுமையை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு விமர்சனத்துக்கு உள்ளானது. இதனிடையே, அரசு வழங்கும் காரை தங்களது எம்எல்ஏக்கள் பயன்படுத்த மாட்டார்கள் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பாமகவும் இதே முடிவை எடுத்துள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணியிடம், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் காரை ஏற்றுக்கொள்வார்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாமகவை பொறுத்தவரை அனைவரிடமும் வாகனங்கள் உள்ளன. எனவே அரசு வழங்கும் வாகனம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். அதற்கு பதிலாக, எங்களுக்கான வாகனம் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதி இருந்தால், எங்கள் தொகுதிகளில் நெல் கொள்முதல் குடோன் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை” என தெரிவித்தார். தற்போது தமிழக சட்டப்பேரவையில் பாமகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி, செஞ்சி தொகுதியில் கணேஷ் குமார், விக்கிரவாண்டி தொகுதியில் சிவக்குமார், ஜெயங்கொண்டம் தொகுதியில் வைத்திலிங்கம் ஆகியோர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதனால் சவுமியா அன்புமணியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாமகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் காரை பெறாமல், அதற்குப் பதிலாக தங்கள் தொகுதிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எம்எல்ஏக்களுக்கு அரசு கார் வேண்டாம்; அதற்கு பதில் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்: சவுமியா அன்புமணி
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்றும், அவற்றுக்கான பராமரிப்பு மற்றும் அலுவலக உதவியாளர் செலவுகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ள சூழலில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார்களைப் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

அரசு கார் வாங்கும் திட்டத்தை தவிர்த்து, அந்த நிதியை மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, அந்த நிதியைக் கொண்டு தொகுதி வாரியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று சவுமியா அன்புமணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics