“பெலிக்ஸை பதவியில் இருந்து நீக்குங்கள்":சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் கோரிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் பதில்
தமிழகச் சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு அரசியல் விவாதங்களில் கலந்துகொள்வது தொடர்பாகத் தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. பெலிக்ஸ் ஜெரால்டு ஊடக விவாதங்களில் பேசுவதைத் தடுக்க வேண்டும் அல்லது அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆஸ்டின் வலியுறுத்திய நிலையில், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வது தனிப்பட்ட விருப்பம் என்று அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்தார். “சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருக்கும் பெலிக்ஸ் ஜெரால்டு அரசியல் விவாதங்களில் கலந்துகொள்ளக்கூடாது. அப்படி தொடர வேண்டும் என்றால் அவரை சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்குங்கள்” என்று தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் சட்டப்பேரவையில் பேசியதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துப் பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (24.08.2026) காலை சட்டப்பேரவை தொடங்கியது. சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின், “சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் இருக்கிறார். அந்த அந்தஸ்த்தில் இருப்பவர் தொலைக்காட்சி விவாதங்களில், அரசியல்ரீதியான கருத்துகளை பேசக்கூடாது. அவரின் நியமனத்தில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால், அவர் அரசியல் விவாதங்களில் பங்குகொள்வதை சட்டப்படி தடுக்க வேண்டும். இல்லை, அவர் அப்படி தொடர வேண்டுமென நினைத்தால் அவரை சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்குங்கள்” என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வது தனிப்பட்ட விருப்பம். அதில் ஏதாவது சட்டப்பூர்வமான விஷயங்கள் இருந்தால் அது குறித்து விவாதிக்கலாம். திண்டுக்கல் லியோனி பாடநூல்கழகத் தலைவராக இருந்தார். அவருடைய தினசரி வேலை எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது மட்டும்தான். அதனால், ஏதாவது தவறு இருந்தால் புகார் தெரிவிக்கலாம். இதற்குமுன் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் இருந்தார்கள், அவர்கள் பொதுமேடையில் பேசக்கூடாது என்பது இல்லை.” என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார். இந்த விவாதம் குறித்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “சாதாரணப் பதவிக்கும் சட்டப்பூர்வப் பதவிக்கும் வேறுபாடு உள்ளதால், இதுகுறித்து ஆய்வு செய்யலாம்” என்று தெரிவித்தார்.

தமிழகச் சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு அரசியல் விவாதங்களில் பங்கேற்பது தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டினுக்கும், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. ஊடக விவாதங்களில் பெலிக்ஸ் ஜெரால்டு பேசுவதைத் தடுக்க வேண்டும் அல்லது அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆஸ்டின் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்தார்.