“இருப்பதை வைத்து அரசை நடத்தலாம் என்பது சரி வராது” - புதுச்சேரி அரசுக்கு திமுக கண்டனம்!
இது குறித்து புதுச்சேரி திமுக தெரிவித்துள்ளதாவது, ‘புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்காத தொலைநோக்கு பார்வையின்றி வெற்று அறிக்கையாக உள்ளது. ரூ.14,300 கோடி நிதி அறிக்கை என்று பெருமை அடிக்கின்றனர். அதில் அனைத்து செலவுகளையும் கழித்தால் மக்களுக்கான திட்டங்களுக்கு ரூ. 2,200 கோடி மட்டும் தான் மிஞ்சுகிறது. இதை வைத்து எந்த வளர்ச்சியை புதுச்சேரியில் எட்ட முடியும்? ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் வழக்கமான நிதி ஒதுக்கீடுகளை மட்டுமே கொண்டு, புதிய திட்டங்களோ அல்லது மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொலைநோக்கு உத்திகள் ஏதும் இல்லாமல் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக கரசூரில் புதிய தொழிற்சாலை என்றனர். இன்று அந்த நிலத்தின் ஒரு பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிறன்றனர். அந்த 800 ஏக்கர் நிலமே 20 ஆண்டுகளுக்கு முன்பாக சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது. அதில் மீண்டும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்று அறிவித்து உள்ளனரே தவிர எப்படிப்பட்ட தொழிற்சாலைகள் துவக்கப்பட உள்ளன. எப்போது பணி துவங்கும், அதற்கான நிதி ஏதும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலையில் குறிப்பிடப்படவில்லை. சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் பிரதமர் துவக்கி வைத்த திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? அவைகள் இந்த ஆண்டு நிறைவேற்றுவதற்கான குறிப்புகள் நிதிநிலையில் கொடுக்கப்படவில்லையே ஏன்?. குறிப்பாக பிரதமரின் ஏக்தா மால் திட்டம் எப்பொழுது நிறைவேற்றப்படும்? போக்குவரத்தை முறைப்படுத்த ராஜீவ்காந்தி–இந்திராகாந்தி சதுக்கங்களின் இணைப்பு மேம்பாலத்தின் இன்றைய நிலை என்ன?. பட்ஜெட்டில் அதற்கான நிதி எங்கே?. விமான நிலைய விரிவாக்கம் பற்றி கடந்த ஐந்தாண்டுகளாக பேசி வந்தனர். ரூ. 4,800 கோடியில் மதிப்பிட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டு பேசுகிறார். நிதிநிலையில் அதற்கான பதில் என்ன?. வில்லியனூரில் வேளாண்மை மண்டலம், சித்த மருத்துக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் புதுச்சேரியில் மருந்து பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்பட்டது. அதுபற்றி இந்த பட்ஜெட்டில் ஏதும் சொல்லப்படவில்லை. அதேபோல் மடுகரையில் கொண்டு வருவதாக கூறிய மாடல் கல்லூரி என்ன ஆனது?. லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் திறக்கப்படும் என்றீர்கள் என்ன ஆனது?. கிடப்பில் உள்ள இரயில்வே திட்டங்கள் பற்றி ஏதும் இல்லை. காரைக்கால் துறைமுகத்தை அரசே திரும்பப் பெறுவது சம்பந்தமான அறிவிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரி துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்துப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. அரசுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி அளவிற்கான மின் கட்டண பாக்கி, வரி வசூல் பாக்கி, கலால் துறை பாக்கிகளை முறையாக வசூல் செய்வதற்கான அறிவிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளதை பெருமையாக சுட்டிக்காட்டி உள்ள முதல்வர், தேர்தல் அறிக்கையில் கூறிய, மாநில அந்தஸ்து, மத்திய நிதி ஆணையத்தின் வரம்பிற்குள் கொண்டுவர நடவடிக்கை, நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், யூனியன் பிரதேசத்தின் முறையான நிர்வாகத்திற்காக குடும்பப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சொன்னது, மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 10 வரை குறைக்கப்படும், பெண்கள் அரசுப் பேருந்துகளிலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளிலும் இலவசப் பயணத்திட்டம் போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் பெயரளவிற்கு கூட சொல்லப்படவில்லையே ஏன்?. இருப்பதை வைத்து அரசை நடத்தலாம் என்பது சரி வராது. இது மாநில வளர்ச்சிக்கு வழிவகை செய்யாது. பிரதமர் ஒத்துழைப்புடன் புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்களை ஐந்தாண்டுகளாக செயல்படுத்தப்பட்டதாக நிதிநிலையில் முதல்வர் குறிப்பிடுவது எவ்வளவு பொய் என்று மக்கள் உணர்ந்துள்ளனர். காரணம் இந்த ஐந்தாண்டு காலத்தில் பாஜக -என்.ஆர்.காங்கிரஸின் அதிகார போட்டிதான் நடந்ததே தவிர, இவர்களின் இரட்டை என்ஜின் ஆட்சி எவ்வித சிறப்பு திட்டங்களையும் புதுச்சேரிக்காக கொண்டுவரவில்லை என்பதே மக்கள் அறிந்துள்ளனர். இன்னும் அதுதான் தொடர்ந்து கொண்டுள்ளதற்கு பேரவைத் தலைவர் தேர்தலே உதாரணம். இன்றைக்கு மக்கள் முன்வைக்கும் மாநில அந்தஸ்து, தொழில் வளர்ச்சியை உள்ளடக்கிய பெஸ்ட் புதுச்சேரி, உள்ளாட்சித் தேர்தல், நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது, பழைய கடன்களை தள்ளுபடி செய்வது போன்ற முக்கிய பிரச்சனைகளுக்காக முதல்வர் டெல்லி சென்று பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து மக்களுக்காக சாதித்து வருவாரா?. அல்லது அருகிலுள்ள கோவளத்தில் நடந்த தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்ததுபோல் டெல்லி செல்வதையும் புறக்கணிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். ஆகவே, முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மாநிலத்தின் வருவாயை பெருக்குவதற்கோ, கடனைப் போக்குவதற்கோ உரிய வழிகாட்டுதல்கள் ஏதுமின்றி, ஒன்றிய அரசின் நிதியையும், வழக்கமான வரிகளையும் மட்டுமே நம்பி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது புதுச்சேரி மக்களை ஏமாற்றும் ஒரு வழக்கமான கணக்கு வழக்குகளைக் காட்டும் பட்ஜெட்டே தவிர, புதுச்சேரியின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பட்ஜெட் அல்ல. எனவே, புதுச்சேரி மக்களின் நலனைப் புறக்கணித்து, தொலைநோக்குத் திட்டங்கள் ஏதுமின்றி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டை திமுக வன்மையாக கண்டிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள 2026-27ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கத் தேவையான தொலைநோக்குப் பார்வை இல்லாமல், இந்த நிதி அறிக்கை வெறும் வெற்று அறிக்கையாக இருப்பதாக அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மொத்தம் ரூ. 14,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அரசு பெருமை பேசினாலும், அனைத்துச் செலவுகளையும் கழித்த பிறகு மக்கள் நலத்திட்டங்களுக்கு வெறும் ரூ. 2,200 கோடி மட்டுமே எஞ்சியிருப்பதை திமுக சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வளவு குறைந்த நிதியை வைத்துக்கொண்டு மாநிலத்தின் வளர்ச்சியை எப்படி எட்ட முடியும் என்றும், இருக்கின்ற தொகையை வைத்து மட்டும் அரசை நடத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் திமுக விமர்சித்துள்ளது.