"தமிழ் உச்சரிப்பு வரலன்னா ஆங்கிலத்தில் பேசுங்க சார்" - மைக் உடைத்த நிதியமைச்சருக்கு சுப்புரத்தினம் பாடம்
தமிழக சட்டமன்ற விவாதத்தின் போது மாநில நிதியமைச்சரின் தமிழ் உச்சரிப்பு மற்றும் எண்களைத் தமிழில் வாசிப்பதில் உள்ள குளறுபடிகள் குறித்து எழும்பிய சாதாரண விமர்சனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் தனது மதத்தையும் பைபிளையும் தேவையில்லாமல் விவாதத்திற்குள் இழுத்து ஆக்ரோஷமாகப் பேசியதும், அவையிலேயே மைக்கை உடைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நக்கீரன் டிவி சேனலுக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தி தொடர்பாளருமான சுப்புரத்தினம் அளித்த பேட்டியில் இது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ''சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்கள் மிகவும் பக்குவமாகவும் நாகரிகமாகவும் தான் பேசினார். 'மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களின் ஆங்கிலப் புலமையைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்படுகிறோம், அற்புதமான ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் பாராட்டுகள். அதே நேரத்தில் உங்கள் தமிழ் உச்சரிப்பை இன்னும் கொஞ்சம் காலப்போக்கில் சரிசெய்து கொண்டால் நன்றாக இருக்கும்' என்று தான் ஒரு அன்பு வேண்டுகோளாக விடுத்தார். ஒரு மாநிலத்தின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிதியமைச்சருக்கு 'நாற்பதாயிரத்து நாநூற்று பன்னிரண்டு' என்ற எளிய எண்களைக் கூட தமிழில் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. அதற்கு அவர் 'என் உரையின் ஒரு பகுதியை பாராட்டியதற்கு நன்றி, எனது தமிழ் தடுமாற்றத்தை அடுத்த பட்ஜெட்டுக்குள் படிப்படியாக வளர்த்துக் கொள்கிறேன்' என்று சுமுகமாகப் பதில் சொல்லி விவாதத்தை முடித்திருக்கலாம். ஆனால் அவரோ, தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு 'ஐ அம் பார்ன் கிறித்தவன்', நான் பைபிள் வாசிப்பவன், அது அன்பையும் அறத்தையும் அமைதியையும் தான் கற்றுக் கொடுக்கிறது என்று குதித்துக் கொண்டு, மைக் போட்டு 'டமார்' என்று அடித்து உடைக்கிறார். சபாநாயகரே 'இதை ஒரு லைட்டர் வேனில் எடுத்துக் கொள்ளுங்கள், அன்பு கலந்த கோரிக்கை தான், இவ்வளவு கோபப்படாதீர்கள்' என்று சொல்லும் அளவுக்கு அமைச்சர் அவையில் அநாகரிகமாக வேகம் காட்டுகிறார். 3000 ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பொதுமறையான திருக்குறளை இந்த உலகத்திற்கு வாரி வழங்கிய மொழி நம் தமிழ் மொழி. தமிழ் நூல்களில் இல்லாத அன்பும், அறமும், அமைதியும் வேறு எந்த மொழியில் இருக்கிறது? வீரமாமுனிவர், ஜி.யு.போப், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் ஐயா போன்ற எத்தனையோ கிறித்தவப் பெரியோர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். அவர்களை எல்லாம் நாங்கள் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறோம். மரியவில்சன் போன்ற அமைச்சர்கள் தங்களின் தவறான மற்றும் அநாகரிகமான நடத்தையால் ஒட்டுமொத்த கிறித்தவ சமுதாயத்திற்கும், இந்த அரசாங்கத்திற்கும் சட்டமன்றத்திலேயே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். தமிழ் மொழியையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் எள்ளி நகையாடியதற்காகவும், அவமதித்ததற்காகவும் அவர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களிடம் எவ்வித நிபந்தனையுமற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார் .

தமிழக சட்டமன்றத்தில் மாநில நிதியமைச்சர் எண்களை வாசிக்கும் விதம் மற்றும் தமிழ் உச்சரிப்பு குறித்து எழுந்த விமர்சனத்திற்கு அவர் ஆவேசமாக பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதத்தின் போது, அமைச்சர் தனது மதத்தையும் பைபிளையும் தேவையற்ற முறையில் இழுத்ததுடன், அவையில் இருந்த மைக்கை உடைத்த சம்பவமும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் எம்எல்ஏவும் திமுக செய்தித் தொடர்பாளருமான சுப்புரத்தினம் நக்கீரன் டிவியிடம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் உச்சரிப்பில் சிக்கல் இருந்தால் ஆங்கிலத்தில் பேசலாம் என்று அவர் அமைச்சருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.