'நயினார் நாகேந்திரனின் இடம் படிப்படியாகத் தேய்ந்து கொண்டிருக்கிறது'-செங்கோட்டையன் பதிலடி
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (15.08.2026) காலை நடைபெற்ற ‘ஒரே நாடு 2.0’ நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்தும், அவருடைய தாயார் குறித்தும் அவதூறாகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாக கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நயினார் நாகேந்திரன் பொதுவெளியில் முதலமைச்சர் விஜய் மற்றும் அவருடைய தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளார். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் அவதூறான கருத்துகளைத் தெரிவிக்கும் வகையிலும் இந்த பேச்சு அமைந்துள்ளது. இதன் அடிப்படையில், நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையிலும், நயினார் நாகேந்திரனின் பேச்சு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் பதில் கொடுத்துள்ளார், "நயினார் நாகேந்திரனைப் பொறுத்த வரையிலும் அவர் எங்கே இருந்து எப்படிப் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருடைய கருத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தனியாகப் பத்திரிகையாளரைச் சந்திக்கின்ற போது அதற்கான விளக்கத்தைத் தருகிறேன். அவரைப் பொறுத்த வரையிலும் இன்று எந்த கருத்துக்கள் சொன்னாலும் இந்த அரசுக்கு எதிர்மறையாகவே கருத்துக்களை வழங்கி வருகிறார்கள். அவர் இருக்கின்ற இடம் படிப்படியாகத் தேய்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் தமிழ்நாட்டில் இன்றைக்கு வரலாறு என்பதை நான் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்றார். இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் கல்லூரி மற்றும் திருவள்ளூர் பள்ளி சம்பவங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது பற்றிச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் . அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், ''பொதுவாகச் சட்டமன்றம் நடைபெறுகிற போது அதற்கான விளக்கங்களைச் சொல்ல வேண்டிய நேரம் சட்டமன்றத்திலேதான், அதை விடுத்துப் பத்திரிகையாளர்கள் செய்தியைத் தருகிற போது அது சட்டமன்ற விதிகளுக்கு மாறாக இருக்கும்'' என்றார்.

ஆகஸ்ட் 15, 2026 அன்று கமலாலயத்தில் நடைபெற்ற 'ஒரே நாடு 2.0' நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிராக, நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் வர்த்தினி என்ற பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள செங்கோட்டையன், நயினார் நாகேந்திரனின் செல்வாக்கு மற்றும் இடம் படிப்படியாகக் குறைந்து வருவதாக பதிலடி கொடுத்துள்ளார்.