'கார் வேணும்...'-எம்எல்ஏக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த விஜய்
சட்டமன்ற கூட்டத்தொடரின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்திருந்தார். "என்னை போன்ற எளிய பின்னணியைக் கொண்ட பல சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் போதிய பொருளாதார வசதி கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகள் பரப்பளவில் மிக பெரியதாக இருக்கின்றன. தொகுதி முழுவதும் மக்கள் குறைகளைக் கேட்க நேரில் சென்று ஆய்வு செய்ய எங்களிடம் கார் வசதி இல்லை. இந்த அவையில் காலணி கூட அணிய இயலாத எளிய நிலையில் சில உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, மக்கள் பணியாற்ற ஏதுவாக எம்எல்ஏக்களுக்குக் கார் மற்றும் உதவியாளர்களை அரசு வழங்க வேண்டும்'' என்று சபாநாயகரிடம் அவர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, சபாநாயகரும் முதலமைச்சர் கோரிக்கைகளை பரிசீலிப்பார் என்று பேரவையிலேயே உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தேவையை உணர்ந்து, அவர்களுக்குக் கார் மற்றும் அலுவலக உதவியாளர்களை வழங்க முதலமைச்சர் விஜய் அதிரடியாக முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, தனிப்பட்ட முறையில் எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்கப்படாமல், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கும் ஒரு கார் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த காரை அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் தங்களது மக்கள் பணிக்காகவும், தொகுதி ஆய்வுகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, மக்கள் பணிகளைத் தொய்வின்றி கவனிக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஒரு உதவியாளரை நியமிக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தங்களைப் போன்ற எளிய பின்னணி கொண்ட உறுப்பினர்களுக்குத் தொகுதிகளை ஆய்வு செய்ய கார் வசதி இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஜோதிமணி கோரிக்கை விடுத்திருந்தார். பெரிய பரப்பளவு கொண்ட தொகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்க தங்களுக்கு வாகன வசதி தேவை என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட விஜய், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலணி அணியக்கூட வசதியற்ற நிலையில் உள்ள எம்.எல்.ஏக்களின் சிரமத்தைப் புரிந்துகொண்டு அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.