வெளிநாடுகளில் 07 மடங்காக அதிகரித்துள்ள இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்; மத்திய அரசு கவலை..!
வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கிட்டத்தட்ட 07 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இனவெறி மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்பு காரணமாக, இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தூய குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்டதாக 15 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த எண்ணிக்கை 2022-ல் 31 ஆகவும், 2023-இல் 67 ஆகவும், 2024-இல் 85 ஆகவும் அதிகரித்தது. 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2021 முதல் 2025 வரை மொத்தம் 302 தாக்குதல் சம்பவங்கள் 36 நாடுகளில் பதிவாகியுள்ளன. இதில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அங்கு, கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 33 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 32, இங்கிலாந்தில் 31, கனடாவில் 30 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அடுத்ததாக, அயர்லாந்திலும் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 2021 மற்றும் 2022-இல் தலா ஒரு சம்பவம் மட்டுமே பதிவான நிலையில், 2023-இல் 05 ஆகவும், 2024-இல் 07 ஆகவும், 2025-ல் 10 ஆகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இனவெறி மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனநிலை காரணமாக இந்தியர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இங்கிலாந்தின் வடக்கு அயர்லாந்தில் இந்திய சமூகத்தினர் இனவெறி வன்முறை தொடர்பாக அச்சம் தெரிவித்த சம்பவங்களும் சமீபத்தில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மத்திய அரசின் முக்கிய முன்னுரிமை என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார். இந்திய தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை பாதிக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த நாடுகளின் அதிகாரிகளிடம் உடனடியாக எடுத்துச் சென்று, உரிய விசாரணை மற்றும் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்களால் வெளிநாடுகளில் கல்வி, வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போது முக்கிய சவாலாக மாறியுள்ளது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 7 மடங்கு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தரவுகளை சமர்ப்பித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட அறிக்கையின்படி, 2021-ஆம் ஆண்டில் 15 ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள், 2022-ல் 31 ஆகவும், 2023-இல் 67 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியர்கள் மீதான இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.