நேபாளத்தில் பெரும் துயரம் ;100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயம்,57 தமிழர்களின் நிலை என்ன?
நேபாளத்தின் வடக்கு எல்லையான ராசுவா மாவட்டத்தில், திபெத் எல்லையையொட்டி அமைந்துள்ள போட்டே கோஷி ஆற்றுப் படுகையில் இன்று திடீரென பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது. திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் பனி உருக்கம் காரணமாக ஆற்றில் ஏற்பட்ட இந்த அதிரடி நீர் உயர்வு, கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒட்டுமொத்த கிராமங்களையும், பாலங்களையும், நீர்மின் நிலையங்களையும் வாரிச் சுருட்டிச் சென்றுள்ளது. சினிமா கிராஃபிக்ஸ் காட்சிகளையே மிஞ்சும் இந்த பேரழிவு காட்சி பார்ப்போரை உலுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கோரத் தாண்டவத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இமாலயப் பேரழிவில் ஒட்டுமொத்தமாகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்படச் சுமார் 384 பேர் மாயமாகியுள்ளனர் என நேபாள சுற்றுலா வாரியம் முதற்கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக, ஆன்மீகப் பயணம் மற்றும் சுற்றுலா சென்ற 105 இந்தியக் குடிமக்கள் தற்போதைய நிலவரப்படி மாயமாகியுள்ளனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 தமிழர்கள் இந்த வெள்ளப் பாதிப்புப் பகுதியில் சிக்கித் தவித்து வருவதாக முதற்கட்டத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக மயிலாடுதுறையை சேர்ந்த 6 பேர் சிதம்பரத்தை சேர்ந்த 7 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மொத்தமாக 37 தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. தொலைத்தொடர்பு கோபுரங்கள் சரிந்து விழுந்துள்ளதாலும், சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் தற்போதைய துல்லியமான நிலவரத்தை உடனடியாக அறிய முடியாமல் உறவினர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது நேபாளப் ராணுவம், ஆயுதப் படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து வான்வழியாக ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளனர். எனினும், பாதிக்கப்பட்ட ராசுவாகாதி மற்றும் டிமுரே ஆகிய மலைப் பகுதிகளில் வெள்ள நீர் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓடுவதால் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த திடீர் வெள்ளத்தின் வீரியம் இந்திய எல்லையை நோக்கி நகர்வதால், பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதி மாவட்டங்களுக்கும் மத்திய நீர் ஆணையம் அவசர வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியர்களையும் மீட்கும் பணிகளைத் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது.

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திபெத் எல்லையை ஒட்டியுள்ள போட்டே கோஷி ஆற்றுப் படுகையில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. திபெத் பகுதியில் நிகழ்ந்த பனிப்பாறை சரிவு மற்றும் பனி உருக்கம் காரணமாக ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இந்த வெள்ளத்தில் கிராமங்கள், பாலங்கள் மற்றும் நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமாகியிருப்பதாகவும், அதில் 57 தமிழர்களின் நிலை குறித்த கவலை எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.