அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல; பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா?: ஐகோர்ட் கேள்வி
சகோதரரைத் தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய நிதி அமைச்சர் மரிய வில்சனின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல; பதவிக்கு வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டாரா?” எனக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் எந்தத் தேதியில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்பதைத் தெரிவிக்குமாறு அவரது தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நிதி அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அமைச்சர் மரிய வில்சன் சார்பில் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக்கூற நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா? எனக் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை எனக்கூறி, எந்த தேதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கும்படி அமைச்சர் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

சகோதரரைத் தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்கக் கோரி, அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என்று குறிப்பிட்டு, பதவியேற்ற பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டாரா என கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் எந்த தேதியில் நேரில் ஆஜராவார் என்பதைத் தெளிவுபடுத்துமாறு, அவரது வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.