PulseNews
அரசியல்

“டிஜிட்டல் தொழில்நுட்பம், கண்டுபிடிப்புத் துறைகளில் முத்திரை பதித்துள்ளோம்” - பிரதமர் மோடி பேச்சு!

நாட்டின் 80வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையின் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 12 ஆண்டுகளில், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலை மக்கள், பழங்குடியினர்; கிராமப்புற, நகர்ப்புறவாசிகள்; ஏழைகள் அல்லது நடுத்தர வர்க்கத்தினர்; இளைஞர்கள் முதியவர்கள்; பெண்கள், ஆண்கள்; வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த எண்ணற்ற குடிமக்களும், தேசத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல தங்களின் அசைக்க முடியாத மன உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் பாடுபட்டுள்ளனர். இந்த முயற்சிகளை நான் மரியாதையுடன் அங்கீகரிக்கிறேன். நாம் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும் மற்றும் நமது நலன்களைப் பாதுகாக்க வேண்டும். இன்று, ஒவ்வொரு இந்தியரும் 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்), 'சுதேசி', 'வோக்கல் ஃபார் லோக்கல்' (உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம்) போன்ற முன்முயற்சிகளுடன் இணைந்து வருகிறார்கள். எரிசக்தி பாதுகாப்பு என்பது காலத்தின் தேவையாகும். 2047ஆம் ஆண்டிற்குள் 100 கிகாவாட் அணுசக்தியைப் பெறும் இலக்கை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். இந்த தசாப்தத்தில் ஐந்து புதிய அணு உலைகளைத் தொடங்க இலக்கு வைத்துள்ளோம். நாடு சுதந்திரம் பெற்றது பல கனவுகளுடன் கூடிய சுதந்திரம் அது. இருப்பினும், நம்மால் வேகத்தை எடுக்கவோ உந்தத்தைப் பெறவோ முடியவில்லை. 'நடக்கும்', 'நடக்கட்டும்', 'பார்த்துக் கொள்ளலாம்' என்ற அலட்சியமான மனப்பான்மையிலேயே நாம் மூழ்கிக் கிடந்தோம். 2014-ஆம் ஆண்டிற்குள், ஒட்டுமொத்த உலகமும் நம்மை நலிவடைந்த ஐந்து நாடுகளின் வரிசையில் தள்ளியிருந்தது. அதற்கு மத்தியில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா புதிய வேகத்தைப் பெற்றுள்ளது. நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம், மேலும் நமது 140 கோடி குடிமக்களின் உறுதியானது, இப்போது நமது கூட்டுத் தீர்மானத்தையும் திறனையும் எவராலும் தடுக்க முடியாத அளவிற்கு வலுவாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்கும், கதர் மற்றும் கிராமத் தொழில்களின் உற்பத்தி கிட்டத்தட்ட ஐந்து மடங்கும் அதிகரித்துள்ளது. மின்னணு சாதனங்கள் உற்பத்தி கிட்டத்தட்ட ஏழு மடங்கு விரிவடைந்துள்ளது. நவீன இரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்கும், மொபைல் போன் உற்பத்தி 33 மடங்கும் உயர்ந்துள்ளது. அதற்கும் மேலாக, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறைகளில் நாம் நமது முத்திரையைப் பதித்துள்ளோம். இணையப் பயனர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, காப்புரிமை உரிமங்கள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நூறு மடங்கு வளர்ந்துள்ளன. சாதாரண குடிமகனுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் நாம் அதே தீவிரத்துடன் பணியாற்றியுள்ளோம். முன்னெப்போதையும் விட சராசரி ஆண்டு விகிதத்தில் 15 மடங்கு வேகத்தில் குழாய் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளோம். எரிவாயு இணைப்புகள் முந்தைய ஆண்டு வேகத்தை விட ஆறு மடங்கு வேகமாக வழங்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கான கழிப்பறைகளை நான்கு மடங்கு அதிகமாகக் கட்டியுள்ளோம். மேலும் பின்தங்கிய மக்களுக்கு முந்தைய வீதத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் வீடுகளை வழங்கியுள்ளோம். நாடு நிர்வாகத்திலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது; ஆயிரக்கணக்கான இணக்கத் தேவைகள் நீக்கப்பட்டுள்ளன, மேலும் நூற்றுக்கணக்கான பழமையான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டின் சட்டங்களை நம்பி ஒருவரால் 21ஆம் நூற்றாண்டிற்குள் பயணிக்க முடியாது. நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் மெட்ரோ நெட்வொர்க்குகளை விரிவுபடுத்தினோம். இந்த வேலைகள் செயல்படுத்தப்பட்ட வேகமும் அளவும் இந்த உந்துதல், இந்த விரிவாக்கம் மற்றும் இந்த சாதனைகள் சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த தசாப்தத்தில் முதன்முறையாகக் காணப்பட்ட ஒரு மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு முன்பு, குழாய் மூலம் எரிவாயு விநியோகம் 70 நகரங்களில் மட்டுமே இருந்தது. கடந்த 12 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 700 நகரங்களாக உயர்ந்துள்ளது. இன்று, நாட்டில் 1.75 கோடி குடும்பங்கள் குழாய் எரிவாயு இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“டிஜிட்டல் தொழில்நுட்பம், கண்டுபிடிப்புத் துறைகளில் முத்திரை பதித்துள்ளோம்” - பிரதமர் மோடி பேச்சு!
PulseNews சுருக்கம்

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று (15.08.2026) நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்த உரையின் போது, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இந்தியா சிறந்து விளங்குவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடியினர், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள், ஏழை-எளியோர், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics