"பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனால், பேஸ்மெண்ட் வீக்கு"; எ.வ.வேலு-விடம் தக் லைஃப் செய்த சபாநாயகரால் அவையில் சிரிப்பலை: வைரல் வீடியோ
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “முதலமைச்சர் உக்காந்து இருக்குற இந்த டேபிலு, இந்த மைக்கு இதெல்லாமே நான் பார்த்து பார்த்து நைட்டு செஞ்சேன்" நேத்து எங்களுக்கு சலாம் போட்டவர்கள் தான் இன்னைக்கி உங்களுக்கும் சலாம் போடுறாங்க. அது எல்லாம் கொண்டு வந்தவர் கலைஞர்” என்று விஜய் கூர்ந்து கவனித்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனால், பேஸ்மெண்ட் வீக்கு.." என்று தக் லைஃப் கவுண்ட்டர் கொடுக்க அவையில் சிரிப்பலை எழுந்தது. இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் பட்ஜெட் மீது துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பொதுப் பணித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு புதன்கிழமை பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “மனித வள மேலாண்மை என்பது ரொம்ப முக்கியம். உதாரணமாக இந்த சட்டமன்றத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறோம், நான் முதல் முதலாக இங்கே சட்டமன்ற உறுப்பினராக வந்த காலத்திலும் சரி, அவை முன்னவர் கே.ஏ. செங்கோட்டையன் அவர் வந்த போதும் சரி, முதலமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றிய ஓ.பி.எஸ் காலத்திலும் சரி, சட்டப்பேரவையில் ஐந்து அடி அகலத்தில் ஒரு பெரிய மேசை போடப்பட்டிருக்கும். இரண்டு பக்கமும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்கார்ந்து இருப்பார்கள். பிரச்னை பெரிதாகிற போது, ஒருவரை ஒருவர் கையைப் பிடித்து இழுத்துக்கொள்கிற நிகழ்வுகள் எல்லாம் இந்த சட்டமன்றத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற வரலாறு உண்டு. ஆனால், இன்றைக்கு இப்படி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், செயலாளர்கள், அமர்ந்திருக்கிற மேசைகள், பேசுகிற இந்த மைக் இவை அத்தனையையும் கலைநயத்தோடு செய்தது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டினுடைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் பார்த்து பார்த்து இரவு நேரத்தில் இப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி செய்யப்பட்டது” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். வீடியோவைப் பாருங்கள்: "முதலமைச்சர் உக்காந்து இருக்குற இந்த டேபிலு, இந்த மைக்கு இதெல்லாமே நான் பார்த்து பார்த்து நைட்டு செஞ்சேன்.." நேத்து எங்களுக்கு சலாம் போட்டவர்கள் தான் இன்னைக்கி உங்களுக்கும் சலாம் போடுறாங்க.. அது எல்லாம் கொண்டு வந்தவர் கலைஞர் - எ.வ.வேலு பேச பேச முதலமைச்சர் விஜய் பார்த்த பார்வை..... pic.twitter.com/POyFJU6kdZ — Polimer News (@polimernews) August 18, 2026 அப்போது ஆளுங்கட்சி தரப்பில் குறுக்கிட்டபோது நான் பேசிய பிறகு பேசுங்கள், நான் ஏதாவது குறிப்பிட்டேனா என்னுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று எ.வ.வேலு கூறியதும் அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும் என்றால் அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். அரசாங்கம் ஒரு திட்டம் போடுவது என்று சொன்னால் அந்த திட்டம் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்றால், அது அரசு அலுவலகர்கள் கையில்தான் இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், உங்கள் அரசு அலுவலர்கள், எங்கள் அரசு அலுவலர்கள் என்று கிடையாது. நேற்று எங்களுக்கு சலாம் போட்டவர்கள்தான் இன்று உங்களுக்கும் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்தான். ஜனநாயகத்தில் மக்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அதன்படி மாறி மாறி ஆட்சி அமைத்துக் கொள்கிறோம். அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்தான். அந்த அரசு அதிகாரிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முதலில் நினைத்தவர் கலைஞர் கருணாநிதிதான். அவர்தான் அரசு அலுவலர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். அரசு அலுவலர்களுக்கு ஊதியம் என்பது திட்டத்தோடு இணைந்த ஒன்றுதான். ஆசிரியர்கள் இந்த நாட்டினுடைய கண்கள், அவர்கள் இல்லை என்று சொன்னால் பண்பட்ட சமூகம் உருவாகாது. தி.மு.க ஆட்சி வந்தபோது என் தலைவர் கலைஞர் அரசு அலுவலர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்தார். 1972-ல் அப்போது பழிவாங்கும் ரகசிய குறிப்பேடு என்று ஒன்று இருந்தது. அதை ரத்து செய்தவர் கலைஞர். அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்களின் வாரிசுக்கு பணி வழங்கப்படும் என்று சொன்னவர் கலைஞர். இறந்தவர் குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று சொன்னவர் கலைஞர். பொங்கல் போனஸ் கொடுத்தவர் கலைஞர்தான். மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வுகளை வகுத்துக் கொடுத்தவர், அரசு பணியாளர்கள் 30 ஆண்டு காலம் பணி புரிந்தால் அவர்களுக்கு முழு ஊதியம் தர வேண்டும் என்று சொன்னவர் கலைஞர். 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்தால் அதற்கு பணப்பயன் கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் கலைஞர். 2008-ல் அரசு பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தைக் கொண்டு வந்தவர் கலைஞர். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடை ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சியில் கலைஞர் செய்தார். ஒன்றே ஒன்று நான் கேட்க விரும்புகிறேன்” என்று எ.வ.வேலு பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “நானும் ஒன்றே ஒன்று தான் கேட்க விரும்புகிறேன், “பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் பேஸ்மெண்ட் வீக்கு” என்ற வடிவேலுவின் நகைச்சுவை டயலாக்கை கவுண்ட்டராகக் கூறி அவர் எ.வ.வேலுவை உரையை முடித்து விடுங்கள் என்று தக் லைஃப் கவுண்ட்டர் கொடுத்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது. சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அரசியல் களத்திலும் சட்டப்பேரவை விவாதங்களிலும் வழக்கமாக வீசப்படும் காரசாரமான விமர்சனங்களுக்கு மத்தியில், நகைச்சுவை உணர்வோடு சபாநாயகர் கொடுத்த இந்த சாதுரியமான 'கவுண்ட்டர்' அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களையும் புன்னகைக்க வைத்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு தற்போதைய 'வைரல் ஹிட்' ஆக வலம் வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் அமர்ந்திருக்கும் மேஜை மற்றும் ஒலிவாங்கி உள்ளிட்டவற்றை தாம் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியதாகக் குறிப்பிட்டார். நேற்று தங்களுக்கு சலாம் போட்டவர்களே இன்று மற்றவர்களுக்கும் சலாம் போடுவதாகவும், இவையனைத்தையும் கலைஞர் கொண்டு வந்ததாகவும் அவர் பேசினார்.
அவரது பேச்சின்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "பில்டிங் ஸ்ட்ராங்கு, ஆனால் பேஸ்மெண்ட் வீக்" என்று கிண்டலாகப் பதிலளித்தார். சபாநாயகரின் இந்த 'தக் லைஃப்' கருத்தைக் கேட்டு அவையில் இருந்தவர்கள் சிரிப்பலை எழுப்பினர், இந்த நிகழ்வின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.