ஹெல்மெட் இல்லாமல் வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏவுக்கு அபராதம்; அதிரடி காட்டிய போலீசார்!
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்ற அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் என்பவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கார் வழங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் ஓட்டுநர் நியமிக்கப்படாததால் எம்.எல்.ஏ வையாபுரி அதிருப்தியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வையாபுரி மணிகண்டன், நேற்று (29-08-26) தனது இருசக்கர வாகனத்திலேயே சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு வந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரவில்லை. அனைத்த் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பணியாற்ற ஏதுவாக முதல்வர் அன்றைக்கே கார்களை வழங்கிவிட்டார். ஆனால், கடந்த 3 மாதங்கள் ஆகியும் ஓட்டுநர்களை அரசு அதிகாரிகள் நியமிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த வையாபுரி மணிகண்டனுக்கு புதுச்சேரி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அதாவது சட்டப்பேரவைக்கு வந்த வையாபுரி, தலைக்கவசம் அணியாமலும், நம்பர் பிளேட் இல்லாமலும் வந்துள்ளார். அதனால் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு புதுச்சேரி போலீசார் ரூ.1,500 அபராதம் விதித்துள்ளனர். அரசு சார்பில் கார் வழங்கப்பட்டாலும் ஓட்டுநரை நியமிக்கப்படாததை கண்டித்து இருசக்கர வாகனத்தில் வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏவுக்கு, போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி அவருக்கு அபராதம் விதித்த சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் கார் வழங்கப்பட்டும், மூன்று மாதங்களாக ஓட்டுநர் நியமிக்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியால் அவர் சொந்த வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ என்பதால் சலுகை காட்டாமல், போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதித்த போலீசாரின் செயல் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. தமக்கு கார் இருந்தும் ஓட்டுநர் இல்லாத சூழல் குறித்து எம்.எல்.ஏ அதிருப்தியில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.