“முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்” - கனிமொழி எம்.பி. பெருமிதம்!
சுதந்திரத் தினத்தன்று மாநிலத் தலைநகரங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களுக்கு அந்த உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆவார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசு தினத்தன்று நாட்டின் குடியரசுத் தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்களும் கொடியேற்றி வருகின்றனர். அதே சமயம், சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமரைப் போல மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கே கொடியேற்றும் உரிமை இருக்க வேண்டும் என்று கலைஞர் மத்திய அரசுக்குத் தொடர்ந்து வலியுறுத்தினார். இது தொடர்பாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதியதுடன், மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமையை அவர் வென்றெடுத்தார். இதன் விளைவாக, 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய இந்தியாவின் முதல் மாநில முதலமைச்சர் என்ற பெருமையைக் கலைஞர் பெற்றார். அந்த வகையில் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த வரலாற்று நிகழ்வு நடந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, 2024ஆம் ஆண்டு சென்னை கோட்டையில் இதற்கான சிறப்பு நினைவுத் தூண் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக கடந்த 1973ஆம் ஆண்டு வரை ஆகஸ்ட் 15ஆம் தேதியும், குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதியும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தான் கோட்டையில் கொடியேற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாட்டின் 80வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளாரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருருமான கனிமொழி எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு. அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் கலைஞர். தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று மாநிலத் தலைநகரங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த வழக்கத்தை மாற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களே அந்த உரிமையைப் பெற வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் என்று கனிமொழி எம்.பி. பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரும், மாநில ஆளுநர்களும் கொடியேற்றும் நிலையில், சுதந்திர தினத்தன்று பிரதமரைப் போல மாநிலங்களில் முதலமைச்சர்களும் கொடியேற்ற வேண்டும் என்ற உரிமையை கலைஞர் பெற்றுத் தந்தார்.