PulseNews
அரசியல்

அவர்களை மாற்ற முடியாது! தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற மனநிலையில் உள்ளனர்-மாணிக்கம் தாகூர் விமர்சனம்

தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். மேலும், தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அரசியல் அணுகுமுறைகள் முற்றிலும் வேறுபட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர், நீட் தேர்வு, மேகதாது அணை, இந்தியா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். நீட் தேர்வு குறித்து பேசிய அவர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என்றும், ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகத்திற்கு நீட் விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கையே அவரது முதல் கையெழுத்தாக இருக்கும் என்றும் கூறினார். தவெக அமைச்சர்களை விமர்சித்த மாணிக்கம் தாகூர், “தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களை மாற்ற முடியாது. அதனால்தான் ராகுலுக்கு பதிலாக விஜய்யை பிரதமர் என்று கூறி வருகிறார்கள். தவெக மனநிலை வேறு, எங்கள் மனநிலை வேறு” என தெரிவித்தார். மேலும், மத்திய அரசை விமர்சித்த அவர், அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதாகவும், இதற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தார். காவிரி விவகாரம் குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், “மேகதாதுவில் ஒரு செங்கலைக்கூட வைக்கக் கூடாது என்பதுதான் தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு” என்றார். காவிரி தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சனை என்றும், மத்திய அரசு உரிய அழுத்தம் கொடுத்தால் கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட முடியாது என்றும் தெரிவித்தார். இந்தியா கூட்டணி குறித்து பேசிய அவர், கூட்டணியில் தற்போது 23 கட்சிகள் இருப்பதாகக் கூறினார். தவெகவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தால், அவர்களை இந்தியா கூட்டணியில் இணைத்துக்கொள்வோம் என்றும், “எம்பி இருந்தால்தான் அவர்களை கூட்டணியில் இணைப்போம்” என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்க விஜய் முதலில் ராகுல் காந்தியிடம்தான் ஆதரவு கேட்டதாகவும், முதல் ஆதரவு கடிதம் காங்கிரஸ் கட்சிக்கே வழங்கப்பட்டதாகவும் மாணிக்கம் தாகூர் கூறினார். சட்டப்பேரவை நேரலை தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் 2001ஆம் ஆண்டிலிருந்தே நேரலை செய்யப்படுவதாகவும், தமிழக சட்டப்பேரவையில் தற்போது தான் நேரலை தொடங்கியுள்ளதாகவும் கூறிய அவர், இதற்கு மக்கள் பழகுவதற்கு சில மாதங்கள் ஆகும் என்றார். இடதுசாரிகள் தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் தவறு இருந்ததாகவும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், தமிழகத்தின் தொழில் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வலுவாக இருப்பதால் தொடர்ந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிகளிலும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே முதலீடு மற்றும் தொழில் தொடங்கிவிடாது என்றும், அதற்கு பல்வேறு நடைமுறைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால், புதிய ஆட்சியை அவசரமாக மதிப்பிடாமல், திட்டங்கள் நடைமுறைக்கு வரும் காலத்தைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அவர்களை மாற்ற முடியாது! தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற மனநிலையில் உள்ளனர்-மாணிக்கம் தாகூர் விமர்சனம்
PulseNews சுருக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே செயல்படுவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அரசியல் அணுகுமுறைகள் முற்றிலும் மாறுபட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், நீட் தேர்வு, மேகதாது அணை மற்றும் இந்தியா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics