PulseNews
அரசியல்

திமுகவில் அதிகாரமிக்க பதவி கேட்கிறாரா கனிமொழி? பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர் பதவிகள் மீது குறி? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுக தனது கட்சி கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், நிர்வாகிகள் நியமனம் முதல் மாவட்ட அமைப்பு வரை பல்வேறு சீரமைப்புகளை மேற்கொள்ள திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கிளைக் கழக செயலாளராக இருப்பவர்களின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும் என்றும், ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அந்தப் பொறுப்பை வகிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயதை 70 ஆக நிர்ணயிக்கவும், ஒருவர் அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக பதவி வகிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியில் அதிகமான நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும் என திமுக தலைமை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இந்த சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., கட்சியில் தனக்கு மேலும் அதிகாரமிக்க பொறுப்பு வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது திமுகவில் தலைவருக்கு அடுத்த முக்கியமான பொறுப்பாக பொதுச்செயலாளர் பதவி உள்ளது. அந்தப் பதவியில் துரைமுருகன் உள்ளார். அவருக்கு அடுத்ததாக பொருளாளர் பதவியில் டி.ஆர்.பாலு உள்ளார். முதன்மைச் செயலாளர் பொறுப்பில் கே.என்.நேரு உள்ளார். இதற்கு அடுத்த நிலையில் துணைப் பொதுச்செயலாளர் பதவி உள்ளது. அந்தப் பொறுப்பில்தான் கனிமொழி உள்ளார். இந்நிலையில், பொதுச்செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றை தனக்கு வழங்க வேண்டும் என கனிமொழி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் கூடுதல் அதிகாரம் கொண்ட பதவியை கனிமொழி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கனிமொழியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கனிமொழி ஏற்கனவே திமுக மகளிரணிச் செயலாளராக பணியாற்றியவர் என்பதால், மகளிரணி நிர்வாகிகள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் புதிய கட்டமைப்பில் பெண்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், 33 சதவீத இடஒதுக்கீட்டை கருத்தில் கொண்டு கட்சிப் பொறுப்புகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்தும் கனிமொழி, மு.க.ஸ்டாலினிடம் பேசியுள்ளதாக கூறப்படும் நிலையில், திமுகவின் அடுத்தகட்ட அதிகார மையத்தில் கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் எழுந்துள்ளது. இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் தற்போது இளைஞரணிச் செயலாளராக இருப்பதால், அது சார்பு அணிப் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. அதேவேளையில், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகள் கட்சியின் பிரதான தலைமைக் கட்டமைப்பில் இடம்பெறுகின்றன. எனவே, கனிமொழியின் அடுத்தகட்ட நகர்வு திமுகவின் உள்கட்சி அரசியலில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திமுகவில் அதிகாரமிக்க பதவி கேட்கிறாரா கனிமொழி? பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர் பதவிகள் மீது குறி? அதிர்ச்சியில் ஸ்டாலின்!
PulseNews சுருக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சியை வலுப்படுத்துவதற்காக திமுக தனது கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் மாவட்ட அமைப்புகளைச் சீரமைப்பது குறித்து அக்கட்சி ஆலோசித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics