PulseNews
அரசியல்

“கடவுள் முருகனே திமுகவுக்கு தான் வாக்களித்திருப்பார்” - சேகர்பாபு பேட்டி!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை வேவு பார்த்து வருகிறார். அவருக்கு இத்துறையில் இருந்து அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். பயத்தின் காரணமாக அவர் இப்படி செய்து வருகிறார். இந்த துறையில்கடந்த ஆட்சி காலத்தில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு தேவையற்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகத் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தவெக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களிடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்றது. கூட்டத்தொடர் முடிந்த பின்னர், திமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சேகர்பாபு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் அமைச்சர் ரமேஷ் வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “கடந்த காலங்களில் நாங்கள் நியமிக்கப்பட்ட அரங்காவலர்களுடைய பட்டியலை படித்தாலே உங்களுக்கு தெரியும். அனைத்து இடங்களிலும் தகுதியான உறுப்பினர்களைத் தான் நியமித்திருக்கின்றோம். ஏற்கனவே நம்முடைய உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த மகாதேவன் தலைமையில் இருந்த அமர்வு 574 என்ற ஒரு நீதிமன்ற உத்தரவை பிறப்பித்திருக்கின்றது. அந்த உத்தரவில் அரங்காவலர் குழுவாக நியமிக்கப்படுகின்றவர்கள் அதுவும் முதுநிலை கோயில்களில் அரங்காவலர் குழுக்களாக நியமிக்கப்படுகின்றவர்கள் அரசியல் சார்பில்லாமல் ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களாக நியமிக்க வேண்டும் என்று எடுத்து கூறி இருக்கின்றார்கள். தற்போது இவர்கள் அரங்காவலர் கூடிய விண்ணப்பங்களையே மூன்று முறை கால நீட்டிப்பு செய்திருக்கின்றார்கள். அதையும் நாங்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இப்படியெல்லாம் உன்னிப்பாக பார்த்தால் அதற்கு அவர் வைக்கின்ற பெயர் வேவு. வேவு பார்ப்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் பணி அல்ல. மக்களுக்கு வேலை பார்ப்பதுதான் திராவிட முன்னேற்ற கழகத்துடைய பணி. எதுவாக இருந்தாலும் நடைமுறைக்கு கொண்டு வாருங்கள். உண்மையில் அதில் தவறு இழைத்திருந்தால் சட்டப் போராட்டம் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் நிரபராதிகள், கொண்டு வாருங்கள். இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் பயப்படுபவர்கள் அல்ல. நாங்கள் அரசியலுக்காக எப்பொழுதுமே ஆண்டவனை பயன்படுத்துவதில்லை. நாங்கள் பக்தியை வைத்து பகை வளர்ப்பவர்கள் அல்ல, பக்தியை வைத்து இறைநம்பிக்கை வளர்ப்பவர்கள். எல்லாம் வல்ல தமிழ் கடவுளான முருகனுக்கு அனைத்துலக மாநாடை நடத்தி 22 நாடுகள் பங்கேற்கின்ற முத்தமிழ் முருகர் மாநாடை நடத்தி காட்டியவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். நம்முடைய பழனி திருக்கோயிலுக்கு பெருந்திட்ட வரையின் வாயிலாக குடமுழுக்கை கண்டது நாங்கள். முதல்படை வீடான நம்முடைய திருப்பரங்குன்றத்திலும் கடந்த ஆட்சியில் தான் குடமுழுக்கை கண்டோம். அதேபோல் மருதமலை எடுத்துக் கொண்டாலும் மின்தூக்கியை நாங்கள் தான் கொண்டு வந்தோம். சுவாமிமலை முருகன் திருக்கோவில் எடுத்துக் கொண்டாலும் பக்தர்களுடைய கடினத்தை கஷ்டத்தை உணர்ந்து மின்தூக்கியை நாங்கள் தான் கொண்டு வந்தோம். முருகருக்கு வாக்களிக்கின்ற உரிமை இருக்குமேயானால் திராவிட முன்னேற்ற கழகத்தில் நடைபெற்ற பணிகளுக்காக நிச்சயம் திராவிட முன்னேற்ற கழகத்திற்குதான் அந்த முருகரே வாக்களித்திருப்பார். அந்த வகையில் முத்தமிழ் முருகனுக்கு பெருமைக்கு பெருமை சேர்த்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி” என்று கூறினார்.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“கடவுள் முருகனே திமுகவுக்கு தான் வாக்களித்திருப்பார்” - சேகர்பாபு பேட்டி!
PulseNews சுருக்கம்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையில் சேகர்பாபு வேவு பார்ப்பதாகவும், துறை அதிகாரிகள் அவருக்கு தகவல்களைக் கசியவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பயத்தின் காரணமாகவே சேகர்பாபு இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார். மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்குத் தேவையில்லாத பல திட்டங்கள் இந்தத் துறையில் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics