தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு பிரதமர், அமெரிக்க அதிபர் கனவு காணலாம்: அன்பில் மகேஸ் விளாசல்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அதன் அலுவலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மறைந்த அன்பில் பொய்யாமொழியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, பகுதி செயலாளர் மோகன், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தற்போதைய சட்டமன்றம் சட்டமன்றமாக இல்லாமல் சண்டை மன்றமாக மாறியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறும் முதலமைச்சர், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடிப் பதில அளிக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு துறை சார்ந்த கேள்விகளுக்கும் அந்தந்த துறை அமைச்சர்களே பதிலளிப்பதுதான் பொருத்தமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய அமைச்சர்களுக்கு ஆரம்பத்தில் அனுபவக் குறைபாடு இருக்கலாம் என்றாலும், அது எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்ற கேள்வியை எழுப்பிய அவர், மானியக் கோரிக்கைகளின்போது துறை சார்ந்த சாதக, பாதகங்களை விவாதித்த பிறகே புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது விவாதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், நேபாளத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் போன்ற மக்கள் உயிர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றார். மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவிப்பதால் டெல்டா விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்பது போல, தமிழகத்திலும் மாநில உரிமையைப் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்றார். பி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழகத்திற்கு வர வேண்டிய சுமார் ரூ.5,109 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இந்நிதி கிடைக்காததால் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்கள் பாதிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தாம் நேரடியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அப்போதைய ஒன்றிய அமைச்சரைச் சந்தித்தும், ராகுல் காந்தியிடமும் எடுத்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார். பட்டியலின மக்களுக்கு புதிய அங்கீகாரமும் திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வன்னியரசு முன்பு பேசிய கருத்துகளுக்கும் தற்போது சட்டமன்றத்தில் பேசுவதற்கும் வித்தியாசம் இருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். லஞ்சம் தொடர்பாக அமைச்சர் கூறிய கருத்துகள் மாற்றிப் பேசப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், சட்டமன்றத்தில் கூறப்படும் கருத்துகளுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பொறுப்புகளை முதலில் நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமர் அல்லது அமெரிக்க அதிபர் கனவு பற்றிப் பேசுவதில் தவறில்லை என்றார். பெண்களுக்கு வழங்குவதாகக் கூறிய ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை, படித்த இளைஞர்களுக்கான ரூ.4,000, மீனவர்களுக்கான ரூ.2,000 இடைக்கால நிதி, ஆறு இலவச சிலிண்டர்கள் திட்டத்தை மூன்று சிலிண்டர்களாக மாற்றியது மற்றும் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளில் அரசு தெளிவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இறுதியாக, சட்டமன்றத்தில் சச்சரவுகளைத் தவிர்த்து, மக்கள் பிரச்சினைகள், மாநில உரிமைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதே தனது முக்கிய கருத்து எனத் தெரிவித்தார். செய்தி: க.சண்முகவடிவேல்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் ஆவதைப் பற்றி கனவு காணுமாறு அன்பில் மகேஸ் விமர்சித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.