சீமைக்கருவேல மரங்கள் அகற்றக் கோரி வைகோ வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுமாறு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கின் விசாரணையில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காகக் கள ஆய்வு நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுவது, பணிகளைத் தாமதப்படுத்தும் தந்திரமே எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்தாவிட்டால் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும், மரங்களை அகற்றும் பணிகளுக்காகக் கனிம நிதியிலிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலா ரூ.5 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில், வருவாய்த்துறைச் செயலரை நோடல் அதிகாரியாக நியமித்து இதுதொடர்பாக கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை (21.08.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 12-ம் அதிகாரிகள் அளவிலான கூட்டம் நடத்தப்பட்டதாகவும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கள ஆய்வு நடத்தி மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இப்பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வி. பாரதிதாசன் காணொளி மூலமாக ஆஜராகி சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பாக இதுவரையிலும் தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும், கடந்த வாரம் கூட கூட்டம் நடந்துள்ளது. ஆனால் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை இன்னும் முழுமையாக அகற்றாத நிலையில் கள ஆய்வு நடத்தப்படும் எனக்கூறுவது இப்பணியைத் தாமதப்படுத்தும் அதிகாரிகளின் தந்திரம் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டுக்கான கனிம நிதி, அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவில் உள்ளதால், அந்த நிதியிலிருந்து, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் வகையில் ரூ. 5 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர். அத்துடன் இந்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், முதலில் நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றக் கோரி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மரங்களை அகற்றுவதற்காகக் கள ஆய்வு நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுவது, பணிகளைத் தள்ளிப்போடுவதற்கான தந்திரம் என்று நீதிபதிகள் விமர்சித்தனர்.
நீதிமன்ற உத்தரவுகளை முறையாகச் செயல்படுத்தத் தவறினால் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த மரங்களை அகற்றும் பணிகளுக்குக் கனிம நிதியைப் பயன்படுத்துவது குறித்தும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது.