மறைக்கப்பட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்ததா? - ‘ஜி டி என்’ விமர்சனம்
கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறாக இந்த ஜிடிஎன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதுவரை ஜிடி நாயுடுவை பற்றி நாம் பலரும் அறிந்திடாத பல விஷயங்களை உள்ளடக்கி உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் எந்த அளவு ரசிக்க வைத்திருக்கிறது...? சிறிய வயது முதலே கண்டுபிடிப்புகளில் மிக மிக ஆர்வமாக இருக்கும் ஜிடி நாயுடு வளர வளர பெரும் பணக்காரர்களுக்கும் ஆதிக்கவாதிகளுக்கும் கிடைக்கும் விஷயங்கள் ஏழைகளுக்கும் எளிய முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி காட்டி அதை மக்களிடையே பிரபலமாக மாற்றுகிறார். இதனால் பிரிட்டிஷ் அரசின் பார்வை அவர் மீது விழுகிறது. அவர் மேல் எக்கச்சக்கமாக வரிவிதிப்பு செய்கின்றனர். அதுக்கு நிறைய பெனால்ட்டியும் போடுகின்றனர். அதை ஜிடி நாயுடு கட்ட மறுக்க அவர் மீது பிரிட்டிஷ்காரர்கள் நம் இந்தியா ஆபீசர்களுடன் இணைந்து கொண்டு தொடுக்கும் போரில் ஜிடி நாயுடு வென்றாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. காமெடி நடிகராக இருந்து பின்னாளில் இயக்குநராக மாறிய கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஜிடிஎன் திரைப்படம் அனைவரும் ரசிக்கும்படியான படமாக மாறி இருக்கிறது. ஜிடி நாயுடு என்று விஞ்ஞானி ஒருவர் நம் நாட்டில் இருந்து இருக்கிறார் என்ற தகவல் மட்டுமே நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் அவர் வாழ்வில் என்னென்ன துன்பங்களை சந்தித்தார், இந்த அளவுக்கு விஞ்ஞானியாக மாற அவர் எடுக்கும் ரிஸ்க்கள் என்ன, அதற்காக அவர் சந்திக்கும் இடையூறுகள் என்ன, அதை அவர் எப்படி வெற்றிகரமாக கடந்தார், அவர் வாழ்வில் எந்த அளவு பிரிட்டிஷ்காரர்களும் சுதந்திர இந்தியாவின் ஆபீஸர்களும் குடைச்சல்கள் கொடுத்திருக்கின்றனர் அதிலிருந்து அவர் மீண்டாரா, இல்லையா? என்ற விஷயத்தை ஒரு ரெட்ரோ ஹாலிவுட் படப் பாணியில் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார். படம் ஆரம்பித்தது முதல் மெதுவாக நகர்ந்து ஜிடி நாயுடுவின் வாழ்க்கைக்குள் நம்மை அப்படியே ஊடுருவ செய்து அந்த காலகட்டத்திற்கு அழைத்து செல்கின்றனர். அப்படியே மெதுவாக நகர்ந்து இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக சென்று இறுதி கட்டத்தில் எதிர்பார்க்காத திருப்புமுனைகளோடு நிறைவடைகிறது. ஒரு கமர்சியல் படம் பார்க்கும்பொழுது எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்குமோ அந்த எதிர்பார்ப்போடு இந்த படத்திற்கு வரும் பட்சத்தில் சற்று ஏமாற்றம் தான் மிஞ்சும். ஒரு ஹாலிவுட் பட பாணியில் இந்த படம் எடுத்திருப்பதும் கிட்டத்தட்ட ஒரு கலை படம் போல் இருப்பதும் சில இடங்களில் பிளஸ்ஸாகவும் பல இடங்களில் மைனஸாகவும் அமைந்திருக்கிறது. விறுவிறுப்பு குறைவாக இருப்பதும் மற்றொரு குறை. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை குறித்த நேரத்தில் அழகாக நேர்த்தியாக புரியும்படி கூறியிருப்பது படத்திற்கு பிளஸ். இப்படி எல்லாம் ஒரு மனிதர் வாழ்ந்தாரா இவர் வாழ்க்கையில் இவ்வளவு நடந்து இருக்கிறதா என்ற உணர்வோடு இத்திரைப்படத்தை கண்ட பின்பு அனைவரும் வெளியே வரும் சூழல் ஏற்பட்டிருப்பது இப்படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. நடிகர் மாதவன் ஜிடி நாயுடுவாகவே வாழ்ந்திருக்கிறார். ஏற்கனவே நம்பி நாராயணனாக நடித்து பெயர் பெற்ற இவர் இந்த முறை ஜிடி நாயுடு வாழ்வை சிறப்பான முறையில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளிலும் ஜிடி நாயுடுவாகவே அவர் தென்படுவது மிகப் பெரிய பிளஸ். படத்தின் நாயகியாக பிரியாமணி சில காட்சிகளே வருவதால் அதை சரி கட்டும் வகையில் துஷாரா விஜயன் மற்றொரு மனைவியாக வருகிறார். அவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மாதவனின் மாமாவாக வரும் தம்பி ராமையா கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். ஜிடி நாயுடுவின் விசுவாசியாக வரும் சத்யராஜ் வழக்கம்போல் நக்கல் நையாண்டியுடன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் ஆபிஸராக வரும் ஜெயராம் சிறப்பான பங்களிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். இவரின் மகளாக வரும் அதிதி பாலன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். பாவப்பட்ட வில்லத்தனம் செய்திருக்கும் கருணாகரன் சிறப்பான பங்களிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே சிறப்பான பங்களிப்பை கொடுத்து அந்த காலகட்டத்திற்கு நம்மளை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக சிறப்பு. அந்த கால விஷயங்களை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி கவர்ந்திருக்கிறார். இவருக்கு பக்கபலமாக கலை இயக்கமும் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. இவர்களின் நேர்த்தியான உழைப்பு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. நம்முடைய வாழ்ந்த இந்தியாவின் எடிசன் விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்ற விஷயத்தை அறிந்து கொள்வதற்காகவே இந்த திரைப்படத்திற்கு சென்று காணலாம். படமாக கமர்சியல் அம்சங்களோடு விறுவிறுப்பாக இருக்கும் என்று எண்ணி செல்பவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சி இருந்தாலும் ஜிடி நாயுடு வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் இந்த திரைப்படம் கண்டிப்பாக டிஸ்அபாயிண்ட்மெண்ட் செய்யாது. ஜிடிஎன் - தமிழ்நாட்டின் பெருமை!

இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் ‘ஜிடிஎன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏழைகளுக்கும் எளிய முறையில் கண்டுபிடிப்புகள் சென்றடைய வேண்டும் எனப் பாடுபட்ட ஜி.டி. நாயுடு, பிரிட்டிஷ் அரசு மற்றும் இந்திய அதிகாரிகளின் தடைகளைத் தகர்த்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும். ஹாலிவுட் பாணியிலான கலைப் படமாக அமைந்துள்ள இப்படம், ஜி.டி. நாயுடுவின் வாழ்வியல் போராட்டங்களையும் அவர் சந்தித்த சவால்களையும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது.
மாதவன் ஜி.டி. நாயுடுவாகவே வாழ்ந்து தனது நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, சத்யராஜ், ஜெயராம், அதிதி பாலன் மற்றும் கருணாகரன் எனப் பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர். அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் அக்காலகட்டத்தை கண்முன் நிறுத்துகின்றன. வணிக ரீதியான விறுவிறுப்பைத் தேடி வருபவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் தந்தாலும், ஜி.டி. நாயுடுவின் அறியப்படாத வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு இப்படம் ஒரு சிறந்த படைப்பாகும்.