PulseNews
லைஃப் ஸ்டைல்

பால்கனியில் இடம் இருந்தாலே போதும்... வீட்டிலேயே ‘பீட்சா கார்டன்’ வளர்க்கலாம்

பீட்சா சாப்பிடும்போது அதன் மேல் இருக்கும் தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய், துளசி போன்றவற்றை நாமே வீட்டில் வளர்த்து பறித்துப் பயன்படுத்தினால் அந்த உணவின் சுவையும், திருப்தியும் இன்னும் அதிகமாக இருக்கும். இதற்காக பெரிய தோட்டமோ, தனி சமையலறைத் தோட்டமோ தேவையில்லை. வீட்டின் பால்கனியில் போதுமான சூரிய ஒளி கிடைக்கும் இடம், சில தொட்டிகள், நல்ல மண் மற்றும் தினசரி சிறிது நேரம் ஒதுக்கினாலே போதும். சரியான செடிகளைத் தேர்வு செய்து, முறையாகத் தண்ணீர் ஊற்றி, தேவையான நேரத்தில் கத்தரித்து பராமரித்தால் பால்கனியிலேயே உங்களுக்கான சிறிய ‘பீட்சா தோட்டத்தை’ உருவாக்கலாம். தக்காளி செடி பீட்சாவுக்கு மிகவும் முக்கியமான அலங்காரப் பொருளான தக்காளியை பால்கனியில் எளிதாக வளர்க்கலாம். தக்காளிச் செடிக்கு தினமும் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் நேரடி சூரிய ஒளி தேவை. எனவே பால்கனியில் அதிக சூரிய ஒளி படும் பகுதியைத் தேர்வு செய்வது நல்லது. அதிகமாகப் பரவாத செர்ரி தக்காளி, குட்டைத் தக்காளி போன்ற ரகங்களைத் தேர்வு செய்யலாம். குறைந்தது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட, அடியில் தண்ணீர் வெளியேறும் வசதியுள்ள தொட்டியைப் பயன்படுத்த வேண்டும். மண் நன்றாக உலர்ந்து போகாமல், அதே நேரத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். பூக்கள் வரத் தொடங்கிய பிறகு 2 முதல் 3 வாரங்களுக்கு ஒருமுறை கம்போஸ்ட் போன்ற இயற்கை உரங்களைச் சேர்க்கலாம். செடியில் காய்கள் அதிகமாக உருவாகும்போது கிளைகள் சாயாமல் இருக்க சிறிய குச்சி அல்லது ஆதரவையும் கொடுக்கலாம். குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சூடான காலநிலையை விரும்பும் குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் செடிகளும் பால்கனிக்கு ஏற்றவை. இவற்றுக்கும் தினமும் 6 முதல் 8 மணி நேரம் சூரிய ஒளி கிடைப்பது சிறந்தது. அதே நேரத்தில் பலத்த காற்று நேரடியாகத் தாக்காத இடத்தில் செடிகளை வைப்பது நல்லது. இல்லையெனில் மென்மையான கிளைகள் முறியும் வாய்ப்பு உள்ளது. ஒரு செடிக்கு குறைந்தது 10 முதல் 12 அங்குல அளவுள்ள தொட்டியைத் தேர்வு செய்யலாம். மண் வளமாகவும், தண்ணீர் தேங்காத வகையிலும் இருக்க வேண்டும். மண்ணின் மேற்பரப்புக்கு சில சென்டிமீட்டர் கீழே விரலை வைத்து ஈரப்பதத்தைச் சோதித்துப் பார்த்து தண்ணீர் ஊற்றலாம். மண் முழுவதுமாக காய்ந்து போக விடக்கூடாது. காய்கள் பறிக்கத் தயாரானதும் தொடர்ந்து அறுவடை செய்வது புதிய காய்கள் உருவாக உதவும். துளசி செடி பீட்சாவின் மேல் தூவப்படும் புதிய துளசி இலைகள் அதன் சுவையையும் மணத்தையும் தனித்துவமாக மாற்றும். துளசிக்கு வெப்பமும் சூரிய ஒளியும் பிடிக்கும். ஆனால் பலத்த காற்று வீசும் இடத்தில் வைத்தால் அதன் மென்மையான இலைகள் விரைவாக வாடிவிடும். எனவே சூரிய ஒளி கிடைக்கும், அதே நேரத்தில் ஓரளவு பாதுகாப்பான இடத்தில் துளசி செடியை வைக்கலாம். தினமும் சுமார் 5 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி கிடைப்பது உதவும். குறைந்தது 8 அங்குல அகலம் கொண்ட தொட்டியில் வளமான, தண்ணீர் தேங்காத மண்ணைப் பயன்படுத்தலாம். மண் முழுவதுமாக காய்ந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செடியில் பூ மொட்டுகள் தோன்றத் தொடங்கும்போது அவற்றைக் கிள்ளி அகற்றி, மேல்புற இலைகளைத் தொடர்ந்து அறுவடை செய்தால் செடி அதிக கிளைகளுடன் அடர்த்தியாக வளர உதவும். பூண்டு வளர்ப்பது ரொம்ப ஈஸி! பீட்சாவுக்கு சுவையும் மணமும் சேர்க்கும் பூண்டையும் தொட்டியில் வளர்க்கலாம். பூண்டுப் பற்களை நுனிப்பகுதி மேல்நோக்கி இருக்கும்படி சுமார் 2 முதல் 3 அங்குல ஆழத்தில் நடலாம். ஒவ்வொரு பல்லுக்கும் இடையில் சுமார் 4 அங்குல இடைவெளி விடுவது நல்லது. குறைந்தது 8 முதல் 12 அங்குல ஆழம் கொண்ட தொட்டியைத் தேர்வு செய்ய வேண்டும். நல்ல சூரிய ஒளியும், தண்ணீர் தேங்காத மண்ணும் பூண்டு வளர்ச்சிக்கு முக்கியம். மண் லேசாக ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்; அதிகமாகத் தண்ணீர் ஊற்றினால் பூண்டு அழுகும் அபாயம் ஏற்படலாம். வெங்காயத்தையும் தொட்டியில் வளர்க்கலாம் வெங்காயத்தை விதை, நாற்று அல்லது வெங்காயக் கன்றுகள் மூலம் வளர்க்கலாம். இதற்கும் போதுமான ஆழமுள்ள தொட்டி தேவை. பல செடிகளை ஒரே தொட்டியில் நடும்போது அவற்றுக்கு இடையில் போதுமான இடைவெளி விட வேண்டும். தினசரி நல்ல சூரிய ஒளி கிடைப்பதுடன், மண் லேசான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகத் தேங்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். வெங்காயத்தின் மேல் பகுதி மஞ்சள் நிறமாகி சாயத் தொடங்கும்போது அறுவடைக்கான நேரம் நெருங்கிவிட்டதை அறியலாம். பால்கனி பீட்சா தோட்டத்துக்கு மண் எப்படி இருக்க வேண்டும்? இந்த காய்கறிகளை வளர்க்கும்போது மண்ணின் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தோட்ட மண் மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தண்ணீர் எளிதாக வெளியேறும் வகையில் தொட்டிச் செடி வளர்ப்பு மண், மக்கிய இயற்கை உரம் மற்றும் தேவையான அளவு இயற்கை உரங்களைச் சேர்த்து பயன்படுத்தலாம். தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறும் துளைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அதிகப்படியான தண்ணீர் வெளியேறாமல் வேர் பகுதியில் தேங்கி, செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தண்ணீர் ஊற்றுவதிலும் ஒரு முறை இருக்கு! செடிகளுக்கு தினமும் ஒரே அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெயில், காற்று, தொட்டியின் அளவு, மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து தண்ணீர் தேவையும் மாறும். மண்ணைத் தொட்டுப் பார்த்து ஈரப்பதம் குறைந்திருந்தால் ஆழமாகத் தண்ணீர் ஊற்றலாம். ஆனால் தொட்டியில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு ஊற்றுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறிய பால்கனி தொட்டிகளில் அதிகப்படியான தண்ணீர் வேர் அழுகலுக்கு காரணமாகலாம். பூச்சிகள் மற்றும் நோய்களை கவனிக்கணும்! பால்கனியில் வளர்க்கப்படும் செடிகளிலும் அசுவினி, வெள்ளை ஈ போன்ற சிறிய பூச்சிகள் தாக்கலாம். எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது இலைகளின் மேல் மற்றும் கீழ்ப்பகுதிகளைப் பார்த்து பூச்சிகள் இருக்கிறதா என்று கவனிக்கலாம். இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது, திடீரென வாடுவது அல்லது இலைகளில் புள்ளிகள் தோன்றுவது போன்ற மாற்றங்கள் இருந்தால் உடனடியாக காரணத்தைக் கண்டறிந்து பராமரிப்பை மாற்றுவது நல்லது. செடிகளுக்கு இடையில் போதுமான இடைவெளி விடுவது காற்றோட்டத்துக்கும் நோய் தடுப்புக்கும் உதவும். அடிக்கடி அறுவடை செய்தால் செடிகளும் நல்லா வளரும்! தக்காளி, மிளகாய், துளசி போன்றவற்றை தேவையான அளவு தொடர்ந்து அறுவடை செய்வது செடிகளின் வளர்ச்சிக்கு உதவும். துளசியைப் பொறுத்தவரை மேல்பகுதியிலிருந்து இலைகளைப் பறித்து வந்தால் பக்கவாட்டில் புதிய கிளைகள் உருவாகி செடி அடர்த்தியாக வளரும். தக்காளி மற்றும் மிளகாய் செடிகளில் காய்கள் முழுமையாக பழுத்த பிறகு பறிப்பது மட்டுமின்றி, தேவையான அளவு தொடர்ந்து அறுவடை செய்வதும் புதிய காய்கள் உருவாக உதவும். சின்ன பால்கனி... சூப்பர் பீட்சா தோட்டம்! பால்கனியில் அதிக எண்ணிக்கையில் செடிகளை வளர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. முதலில் ஒரு தக்காளிச் செடி, ஒரு மிளகாய் அல்லது குடைமிளகாய் செடி, ஒரு துளசி செடி எனத் தொடங்கலாம். பின்னர் இடவசதி மற்றும் பராமரிக்கக் கிடைக்கும் நேரத்துக்கு ஏற்ப பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவற்றைச் சேர்க்கலாம். தினமும் சில நிமிடங்கள் செடிகளை கவனித்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உலர்ந்த இலைகளை அகற்றி, அவ்வப்போது கத்தரித்து வந்தாலே போதும். ஒருகட்டத்தில் பால்கனியில் வளர்த்த தக்காளி, மிளகாய், துளசி உள்ளிட்டவற்றை நேரடியாகப் பறித்து வீட்டிலேயே தயாரிக்கும் பீட்சாவுக்கு பயன்படுத்தும் அளவுக்கு உங்கள் சொந்த ‘பீட்சா தோட்டம்’ தயாராகிவிடும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பால்கனியில் இடம் இருந்தாலே போதும்... வீட்டிலேயே ‘பீட்சா கார்டன்’ வளர்க்கலாம்
PulseNews சுருக்கம்

பீட்சா தயாரிப்பதற்குத் தேவையான தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் துளசி போன்றவற்றை வீட்டிலேயே வளர்த்துப் பயன்படுத்துவது உணவின் சுவையையும் திருப்தியையும் அதிகரிக்கும். இதற்குப் பெரிய அளவிலான தோட்டம் தேவையில்லை.

வீட்டின் பால்கனியில் சூரிய ஒளி படும் இடத்தில், சில தொட்டிகள் மற்றும் தரமான மண்ணைக் கொண்டு எளிதாக இந்தத் தோட்டம் அமைக்கலாம். தினசரி சிறிது நேரம் ஒதுக்கி, சரியான செடிகளைத் தேர்ந்தெடுத்து, முறையாகத் தண்ணீர் ஊற்றி பராமரித்தாலே வீட்டிலேயே பீட்சா கார்டனை உருவாக்க முடியும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle