தரையைத் தொடும் கூந்தல்... கின்னஸில் இடம்பிடித்த இந்தியப் பெண்; எவ்வளவு நீளம் தெரியுமா?
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால், தனது நீண்ட கூந்தலால் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் தொடர்ந்து பராமரித்து வந்த அவர், தற்போது உலகின் மிக நீளமான கூந்தல் கொண்ட பெண் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். அவரது கூந்தலின் அதிகாரப்பூர்வ நீளம் 8 அடி 10 அங்குலம் (271.50 செ.மீ) என அளவிடப்பட்டுள்ளது. ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிகாரப்பூர்வ அளவீட்டின் அடிப்படையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு ரேணு தாரியாலின் சாதனையை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அலியா நசிரோவா என்பவரின் 257.33 செ.மீ (8 அடி 5.3 அங்குலம்) நீளமான கூந்தல் என்ற முந்தைய சாதனையை ரேணு முறியடித்துள்ளார். 10 ஆண்டுகளாக முடியை வெட்டவில்லை இந்த சாதனையின் பின்னணியில் ரேணுவின் நீண்டகால அர்ப்பணிப்பு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் அவர் தனது தலைமுடியை வெட்டாமல் வளர்த்து வருகிறார். இந்திய பாரம்பரியத்தில் நீண்ட கூந்தல் பெண்களின் அழகு மற்றும் தனித்துவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் நிலையில், அந்தப் பாரம்பரியத்தின் மீதான தனது ஆர்வமும் முடியை தொடர்ந்து வளர்க்கும் முடிவுக்கு காரணமாக இருந்ததாக ரேணு தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக முடியை வெட்டாமல் வளர்ப்பது மட்டுமின்றி, அதை சேதமடையாமல் பாதுகாப்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. குறிப்பாக இவ்வளவு நீளமான கூந்தலை தினசரி பராமரிப்பது, சிக்கலை அகற்றுவது, சுத்தமாக வைத்திருப்பது என ஒவ்வொரு கட்டத்திலும் பொறுமையும் நேரமும் தேவைப்படுகிறது. தரையைத் தொடும் அளவுக்கு நீளமான கூந்தல் ரேணுவின் கூந்தல் தற்போது தரையைத் தொடும் அளவுக்கு நீண்டு வளர்ந்துள்ளது. வீட்டில் இருக்கும் நேரங்களில் அதை கவனமாகப் பராமரிக்கும் அவர், வெளியே செல்லும்போது கூந்தலை நீண்ட பின்னலாகப் பின்னிக்கொள்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் முடி தரையில் உரசுவதையும், தேவையில்லாமல் சிக்கிக்கொள்வதையும் தவிர்க்க முடிகிறது. இவ்வளவு நீளமான கூந்தலைப் பராமரிப்பதில் தினசரி தலைமுடி பராமரிப்பு நடைமுறைகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக, முடியை இழுத்து சீவாமல் பொறுமையாகச் சிக்குகளை அகற்றுவது, முடியின் வேர்கள் மற்றும் நுனிகளை கவனமாகப் பராமரிப்பது போன்ற பழக்கங்கள் அவரது நீண்ட கூந்தலைப் பாதுகாக்க உதவியதாகக் கூறப்படுகிறது. இயற்கை முறையில் முடி பராமரிப்பு தனது நீண்ட கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக செயற்கை ரசாயனங்கள் அதிகம் கொண்ட தயாரிப்புகளைத் தவிர்ப்பதாக ரேணு தெரிவித்துள்ளார். வீட்டிலேயே தயாரிக்கும் இயற்கை எண்ணெய் மற்றும் ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்துவதுடன், கூந்தலைப் பராமரிக்க பொறுமையான மற்றும் தொடர்ச்சியான நடைமுறையைப் பின்பற்றி வருகிறார். எனினும், முடி வளர்ச்சிக்கு ஒரே ஒரு எண்ணெய் அல்லது இயற்கை தயாரிப்பே காரணம் என்று அறிவியல் ரீதியாகக் கூற முடியாது. மரபியல், வயது, ஹார்மோன்கள், ஊட்டச்சத்து, தலைமுடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியம் உள்ளிட்ட பல காரணிகள் ஒருவரின் முடி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ரேணுவின் சாதனை அவரது தனிப்பட்ட நீண்டகால பராமரிப்பு மற்றும் இயற்கையான வாழ்க்கை முறையுடன் தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் பிரபலமான ரேணு உலக சாதனையைப் படைத்ததுடன், ரேணு தாரியால் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளார். தனது நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிக்கிறார், அதை சுத்தமாகவும் சிக்கலின்றியும் வைத்திருப்பது எப்படி, நீண்ட கூந்தலைக் கொண்டவர்கள் எத்தகைய பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தனது கூந்தல் சாதனை குறித்து பேசியுள்ள ரேணு, இது தனக்கு மட்டுமின்றி உத்தராகண்ட் மாநிலத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இயற்கையான அழகையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் எண்ணத்தை இளம் தலைமுறையினரிடையே இந்த சாதனை ஏற்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகின் உயரமான மனிதரின் உயரத்துக்கு நிகரான கூந்தல்! ரேணுவின் சாதனையை மேலும் சுவாரஸ்யமாக்கும் மற்றொரு தகவலும் உள்ளது. அவரது 271.50 செ.மீ நீளமான கூந்தல், உலகின் மிக உயரமான மனிதராக கின்னஸ் பதிவில் இடம்பெற்றுள்ள ராபர்ட் வாட்லோவின் 272 செ.மீ உயரத்துக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது. அதாவது, உலகின் மிக உயரமான மனிதரின் உடல் உயரத்துக்கும் ரேணுவின் கூந்தலின் நீளத்துக்கும் வெறும் சில சென்டிமீட்டர் மட்டுமே வித்தியாசம் உள்ளது. ஒருபுறம் உலகின் மிக உயரமான மனிதரின் உயரம் மனித உடல் வளர்ச்சியின் வியப்பை வெளிப்படுத்தும் நிலையில், மறுபுறம் ரேணுவின் கூந்தல் பல ஆண்டுகளாக மேற்கொண்ட பொறுமையான பராமரிப்பின் மூலம் உருவான தனித்துவமான சாதனையாக அமைந்துள்ளது. ரேணு தாரியாலின் இந்த சாதனை, ஒரு தனிப்பட்ட சாதனையைத் தாண்டி, பாரம்பரிய அழகு, இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை மற்றும் நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீதான கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலக சாதனைப் பட்டியலில் இந்தியப் பெண்ணின் நீண்ட கூந்தல் இடம்பெற்றிருப்பது தற்போது சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால், உலகின் மிக நீளமான கூந்தல் கொண்ட பெண் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஹல்த்வானியில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ அளவீட்டின்படி, இவரது கூந்தல் 8 அடி 10 அங்குலம் (271.50 செ.மீ) நீளம் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 257.33 செ.மீ நீளமான கூந்தல் கொண்டிருந்த உக்ரைனைச் சேர்ந்த அலியா நசிரேவாவின் முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
2015-ம் ஆண்டு முதல் தனது தலைமுடியை வெட்டாமல் வளர்த்து வரும் ரேணு, இயற்கை முறையிலான பராமரிப்பு மற்றும் பொறுமையான அணுகுமுறையே இந்த சாதனைக் கிடைத்திற்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். இவரது கூந்தலின் நீளம், கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான மனிதரான ராபர்ட் வாட்லோவின் உயரத்திற்கு (272 செ.மீ) கிட்டத்தட்ட சமமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சாதனை இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பதுடன், பாரம்பரிய அழகின் மீதான கவனத்தையும் ஈர்த்துள்ளது.