“வாழ்க்கையை ஜெயிச்சுடலாம்னு நம்பிக்கை வந்துச்சு” - கல்லூரி நினைவுகளை பகிர்ந்த சூர்யா
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முன்னாள் மாணவரும் நடிகருமான சூர்யா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “இங்க வந்து 30 வருஷம் ஆச்சு. நான் 1992 - 95 பேட்ச். அந்த நினைவுகளெல்லாம் எனக்கு வருது. 30 வருஷம் கடந்து என்ன தான் நம்ம பெருசா சாதிச்சாலும் திரும்பியும் இங்க வரப்போ ஒரு ஸ்டூடண்டாதான் ஃபீல் பன்றேன். இங்க டிகிரி மட்டும் வாங்கல. முழுசா உருவாகுறோம். நான் படிக்க வந்தப்போ நிறைய விதமான மாணவர்கள் இருந்தாங்க. அவங்களை பார்க்கும் போது நான் என்ன பன்னப்போறேன்னு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா பி.காம். முடிச்சிட்டு வெளில போகும்போது எதாவது ஒன்னு பன்னிடுவேன்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு. வாழ்க்கையை ஜெயிச்சுடலாம்னு தோனுச்சு. இந்த காலேஜ்ல இதுக்கு முன்னாடி படிச்சவங்க, இனிமே படிக்கப்போறவங்க எல்லாரையும் என்னுடைய குடும்பமா பார்க்குறேன். எதுவா இருந்தாலும் என்னவா இருந்தாலும் இந்த காலேஜுக்காக நான் அங்கே இருப்பேன். அப்படித்தான் எல்லாருமே என்னைய பார்த்திட்டு இருந்திருக்காங்க. யாராவது என்னைய பார்த்து என்ன படிச்சிருக்கீங்கன்னு கேட்டா வெறும் பி.காம்னு மட்டும் சொல்ல மாட்டேன், லயோலான்னு சேர்த்துதான் சொல்வேன். அதை கேட்குறவங்ககிட்ட ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இந்த காலேஜ் வெறும் சர்டிபிகேட் மட்டும் கொடுக்கல. வாழ்க்கையில ஒரு அடையாளத்தையும் கொடுத்திருக்கு. எங்கு போனாலும் லயோலான்னு கெத்தா சொல்லுங்க” என்றார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் நடிகர் சூர்யா பங்கேற்றார். 1992-95 கல்வியாண்டில் அங்கு பயின்ற அவர், கல்லூரி நாட்களின் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்தாலும், மீண்டும் கல்லூரிக்குள் நுழையும்போது ஒரு மாணவனாகவே உணர்வதாக சூர்யா தெரிவித்தார். பி.காம் படிப்பை முடிக்கும்போது வாழ்க்கையில் சாதித்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை தனக்கு உருவானதாகவும், லயோலா கல்லூரி தனக்கு வெறும் பட்டத்தை மட்டுமல்லாமல் ஒரு அடையாளத்தையும் மரியாதையையும் பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.