அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் விவகாரம் : இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்!
திருச்சி திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உபகோயிலான அன்பில் மாரியம்மன் திருக்கோயிலில், அம்மை வார்த்தவர்கள் தங்குவதற்காக ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய மண்டபம் அமைக்கப்பட உள்ளது எனத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி - திருவரங்கம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்பில் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அங்குத் தங்கி வழிபடுபவர்களின் வசதிக்காக இந்த மண்டபம் பிரத்தியேகமாகக் கட்டப்படவுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, “அறிவியலுக்குப் புறம்பானது” எனக் குற்றம்சாட்டி பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பவோ நம்பவோ வேண்டாம். அன்பில் மாரியம்மன் கோயிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு அவர்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனுக்காகக் கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பைச் சிலர் திட்டமிட்டு அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்குப் பரவும் வகையில் இங்குத் தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனத் தவறாகச் சித்தரித்து உண்மைக்குப் புறம்பாகப் பரப்புகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உபகோயிலான அன்பில் மாரியம்மன் கோயிலில், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி வழிபட புதிய மண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்காக 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் மானியக் கோரிக்கையின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அங்கு தங்கும் பக்தர்களின் வசதிக்காக இந்த சிறப்பு மண்டபம் அமைக்கப்பட உள்ளது.