“தனித்துவமான நடிப்பு... ரசிகர்களிடம் நீங்கா இடம்...” - சௌகார் ஜானகி மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ், தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகி. திரைத்துறையில் ‘சௌகாரு’(1950) என்ற தெலுங்கு படம் மூலம் நுழைந்த அவர் தமிழில் ‘வளையாபதி’(1952) படம் மூலம் அறிமுகமானார். பின்பு பணம் படுத்தும் பாடு(1954), புதிய பறவை(1964), மகாகவி காளிதாஸ்(1966), எதிர் நீச்சல்(1968) எனத் தொடங்கி தில்லு முல்லு(1981), ஹே ராம்(2000) என பிளாக் அண்ட் ஒயிட் கலாம் முதல் இன்றைய கலர் சினிமா வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் 7 தசாப்தங்களாக அவர் நடித்துள்ளார். கடைசியாகத் தமிழில் சந்தானம் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான ‘பிஸ்கோத்’ படத்தில் தோன்றினார். திரையில் இவரது பங்களிப்பைப் போற்றும் விதமாகக் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது. 94 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து விலகி இருந்த நிலையில் நேற்று முன்தினம் தீடீரென உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான பிரச்சனை எனத் தகவல் வெளியானது. அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் முதல்வர் விஜய் தனது, “பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும். திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என எக்ஸ் பக்கம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார். 1950-ல் 'சௌகாரு' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த அவர், 1952-ல் 'வளையாபதி' படத்தின் வாயிலாகத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, எதிர் நீச்சல், தில்லு முல்லு மற்றும் ஹே ராம் எனப் பல்வேறு படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய அவர், ஏழு தசாப்தங்களாக மூன்று தலைமுறை நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவரது மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.