குடும்பத்தில் பண கஷ்டம், அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்; சூர்யா நடிகராக மாற இதுதான் காரணமா?
எழுதியவர்: யஷஸ்வினி ஸ்ரீ தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது, தனது அடுத்த படமான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நடத்திய உரையாடலை சித்தாரா எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் (Sithara Entertainment) பகிர்ந்துள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: அதில், தனது தம்பி கார்த்தியைப் போல தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை என்று சூர்யா கூறியுள்ளார். “நான் ஒரு நடிகராக வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கார்த்தி எப்போதுமே சினிமாவில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். நான் கேமரா முன்பு நிற்கப் போகிறேன் என்பதை ஐந்து நாட்களுக்கு முன்புதான் தெரிந்துகொண்டேன். அதற்காக எந்தத் முன் முயற்சியும் செய்யவில்லை. கேமரா முன்பாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். பின்னர், அது ஒரு பொறுப்பாக மாறியது” என்று சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யாவை நடிக்கத் தூண்டிய குடும்பத்தின் நிதி நெருக்கடி தொடர்ந்து பேசிய சூர்யா, குடும்பத்தில் ஏற்பட்ட நிதிப் பிரச்சினைகளே தன்னை நடிக்கத் தூண்டியதாக தெரிவித்துள்ளார். வீட்டில் நிதிப் பிரச்சினைகள் இருந்தன. அதனால் நான் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சம்பாதித்து என் அம்மாவிடம் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. ஆனால், நான் தடுமாறியபோதும், திரையில் தவறு செய்தபோதும் அனைவரும் எனக்கு நிபந்தனையற்ற அன்பைக் கொடுத்தார்கள். அதனால் அந்தப் பொறுப்பை நான் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று அவர் கூறியுள்ளார். தேவைக்காகத் தொடங்கிய நடிப்பு, காலப்போக்கில் சினிமா மீதான உண்மையான ஆர்வமாக மாறியதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். 1997ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் மூலம் சூர்யா தனது 22வது வயதில் திரையுலகில் அறிமுகமானார். சுவாரஸ்யமாக, இதற்கு முன்பே வசந்த் இயக்கிய ‘ஆசை’ (1995) படத்தில் நடிக்க சூர்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது நடிப்பில் ஆர்வம் இல்லாததால் அந்த வாய்ப்பை அவர் நிராகரித்தார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்தார். அம்மா வாங்கிய ரூ.25,000 கடன் 2024ஆம் ஆண்டு பின்க்வில்லா (Pinkvilla) அளித்த பேட்டியில், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சூர்யா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியதாகத் தெரிவித்திருந்தார். பயிற்சி ஊழியராக தனது பணியைத் தொடங்கியபோது, இரண்டு வாரங்களுக்கு வெறும் ரூ.750 மட்டுமே சம்பளமாக பெற்றதாகவும் அவர் கூறினார். பின்னர் மாத சம்பளம் ரூ.1,200 ஆக உயர்ந்தது. அந்த வேலையை விட்டு வெளியேறும்போது சுமார் ரூ.8,000 சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஆனால், தனது அம்மா ரூ.25,000 கடன் வாங்கியிருந்ததை சூர்யா அறிந்தபோது நிலைமை அவரை சிந்திக்க வைத்தது. மேலும், தனது தந்தையும் நடிகருமான சிவகுமாருக்கு இந்தக் கடன் குறித்து தெரியாது என்பதையும் அவர் தெரிந்துகொண்டார். எனது அப்பா ஒரு நடிகர். இருந்தும் நாங்கள் இப்படிப்பட்ட நிதிப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தோம் என்பதை அறிந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா, எங்களுடைய வங்கிக் கணக்கில் ஒருபோதும் ஒரு லட்சம் அல்லது ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்ததில்லை என்று கூறினார். அப்பாவும் தனது சம்பளத்தை வலியுறுத்தி கேட்கமாட்டார்; சம்பளம் கிடைக்கும்போது கிடைக்கட்டும் என்று காத்திருப்பார். அந்தக் காலகட்டத்தில் அப்பா தொடர்ந்து ஆறு அல்லது பத்து மாதங்களுக்கும் மேலாக வேலை செய்ததில்லை. அப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன்” என்று சூர்யா தெரிவித்துள்ளார். அப்பாவின் படங்களை பார்ப்பதை சூர்யா ஏன் நிறுத்தினார்? தனது ஆரம்பகால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், தனக்கான திரை அடையாளத்தை உருவாக்க உதவியதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். ஒருமுறை தனது நண்பரை திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஒரு அமைச்சரின் வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றதாக சூர்யா நினைவுகூர்ந்தார். அப்போது அவரது நண்பர், சூர்யாவை நடிகர் சிவகுமாரின் மகன் என்று அமைச்சரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சூர்யாவைப் பார்த்த அந்த அமைச்சர், அவர் தனது தந்தையைப் போலவே இருப்பதாகக் கூறியதுடன், திரையிலும் தனது தந்தையைப் போலவே நடிப்பார் என்றும், அதையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம் என்றும் கூறியுள்ளார். அதற்குப் பிறகு நான் அப்பாவின் படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அவருடைய எந்தவொரு பாவனைகளையும் நான் மீண்டும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான்” என்று சூர்யா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களாக 195 படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான சிவகுமாரும், சூர்யா திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ஏற்கனவே பேசியுள்ளார். அப்போது சிவகுமார் கூறுகையில், “ஒரு காலத்தில் நான்தான் குடும்பத்தை வழிநடத்தினேன், சூர்யாவையும் பார்த்துக்கொண்டேன். பல ஆண்டுகளாக குடும்பத்தை நான் கவனித்துக்கொண்டேன். ஆனால் இப்போது அவன் குடும்பத்தை வழிநடத்துகிறான். நாங்கள் அனைவரும் அவனுடைய வழிகாட்டுதலின் கீழ்தான் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

பிரபல நடிகர் சூர்யா தனது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சித்தாரா எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள உரையாடலில், தனது தம்பி கார்த்தியைப் போல ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததில்லை என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் நிலவிய பண நெருக்கடியின் காரணமாக, தன் தந்தைக்குத் தெரியாமல் தனது தாய் கடன் வாங்கிய சூழலில், அந்தப் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காகவே அவர் சினிமாவில் நடிக்க முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.