PulseNews
சினிமா

'அஜித் சம்பளத்தை யாராலும் கொடுக்க முடியாது': ‘டேர்டெவில்’ படத்தை அஜித்தே தயாரிக்க என்ன காரணம்?

திரைப்படங்களின் புரொமோஷன் எனும் விளம்பர நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர்கள் பங்கேற்காமல் தவிர்ப்பதை கடுமையாக விமர்சித்து உள்ள பிரபல சினிமா விநியோகஸ்தரும் பைனான்சியருமான திருப்பூர் சுப்பிரமணியம், இத்தகைய போக்கை இனியும் தயாரிப்பாளர்கள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, நடிகர் அஜித் குமார், நடிகை நயன்தாரா ஆகிய இருவரையும் பெயர் குறிப்பிட்டுச் சாடியுள்ள அவர், தங்களின் சொந்தத் தொழில் அல்லது சொந்தப் படங்களுக்கு மட்டும் புரொமோஷன் செய்யும் இவர்களின் இரட்டை நிலைப்பாட்டைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். 'டூரிங் டாக்கீஸ்' (Touring Talkies) யூடியூப் தளத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், அஜித் குமார் தனது சொந்தத் தயாரிப்பில் படம் தயாரிக்க முடிவெடுத்ததன் பின்னணியை விளக்கிய அவர், தனது முந்தைய படத்திற்கு வாங்கிய அதே சம்பளத்தை பெற முடியுமா என்று அஜித் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தார். பல தயாரிப்பாளர்கள் அவரிடம் பேசி பார்த்தனர்; சம்பளத்தைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் குறைக்கவில்லை. இன்றைய சூழலில் அவ்வளவு பெரிய தொகையைச் சம்பளமாகக் கொடுத்து ரிஸ்க் எடுக்க எந்தத் தயாரிப்பாளரும் தயாராக இல்லை. தற்போதைய சந்தை நிலவரப்படி அத்தகைய சம்பளத்தை வழங்க முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அஜித் குறைவான நட்சத்திர அந்தஸ்து கொண்டவர் என்பதற்காக அல்ல, தயாரிப்பாளர்களால் கதாநாயகனுக்கு அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாத அளவுக்கு இன்றைய சந்தை நிலைமை உள்ளது. சம்பளத்தைக் குறைக்காத பட்சத்தில், சொந்தமாகத் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கே அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்துப் படம் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. சொந்த தயாரிப்பில் இலவசமாகக் கூட வேலை செய்வார்கள்; ஆனால் மற்ற தயாரிப்பாளர்களுடன் லாபப் பகிர்வு (Profit-sharing) முறைக்கு உடன்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார். அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள 'டேர்டெவில்' (DareDevil) திரைப்படத்தை அவரது மனைவி ஷாலினி, 'பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்' (Brave Hearts Production) பேனரில் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பட விளம்பரங்களில் பங்கேற்காதது குறித்து மேலும் சுப்பிரமணியம் பேசியதாவது; முதலாவதாக, அஜித் பட புரொமோஷன்களுக்கு வருவதே இல்லை. ஆனால் கார்/பைக் ரேஸ் என்றால் செல்கிறார்; இப்போது குளிர்பான விளம்பரத்திலும் (Campa Energy) நடிக்கிறார். உலகம் முழுவதும் உள்ள முன்னணி நடிகர்களும், இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களும் தங்களது பட விளம்பர நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் அஜித், நயன்தாரா போன்ற நட்சத்திரங்கள் பட விளம்பரங்களில் பங்கேற்பதில்லை. தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் போடும்போதே இதனை ஏற்றுக்கொள்வதுதான் தவறு. கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் விளம்பரங்களுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூற வேண்டும். நயன்தாரா தனது சொந்தப் படங்களுக்கு விளம்பரம் செய்யச் செல்கிறாரே? அஜித்தோ, நயன்தாராவோ யாராக இருந்தாலும் பட புரொமோஷனுக்கு வரவில்லை என்றால், அவர்களுடன் தமிழில் படம் தயாரிக்க மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் சுப்பிரமணியம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'அஜித் சம்பளத்தை யாராலும் கொடுக்க முடியாது': ‘டேர்டெவில்’ படத்தை அஜித்தே தயாரிக்க என்ன காரணம்?
PulseNews சுருக்கம்

திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர்கள் பங்கேற்காமல் தவிர்ப்பதை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் தங்களின் சொந்தப் படங்களுக்கு மட்டும் விளம்பரம் செய்துவிட்டு, மற்ற படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத இரட்டை நிலைப்பாட்டை அவர் சாடியுள்ளார்.

நடிகர்களின் இத்தகைய போக்கைத் தயாரிப்பாளர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அஜித் குமாரின் சம்பளத்தை யாராலும் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், 'டேர்டெவில்' படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் நடிகர் ஏன் ஈடுபட்டார் என்பதற்கான பின்னணியையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema