“கண்ணீரோடு வழியனுப்புகிறேன்...” - கமல் இரங்கல்
தமிழ், தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகி. திரைத்துறையில் ‘சௌகாரு’(1950) என்ற தெலுங்கு படம் மூலம் நுழைந்த அவர் தமிழில் ‘வளையாபதி’(1952) படம் மூலம் அறிமுகமானார். பின்பு பணம் படுத்தும் பாடு(1954), புதிய பறவை(1964), மகாகவி காளிதாஸ்(1966), எதிர் நீச்சல்(1968) எனத் தொடங்கி தில்லு முல்லு(1981), ஹே ராம்(2000) என பிளாக் அண்ட் ஒயிட் கலாம் முதல் இன்றைய கலர் சினிமா வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் 7 தசாப்தங்களாக அவர் நடித்துள்ளார். கடைசியாகத் தமிழில் சந்தானம் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான ‘பிஸ்கோத்’ படத்தில் தோன்றினார். திரையில் இவரது பங்களிப்பைப் போற்றும் விதமாகக் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது. 94 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து விலகி இருந்த நிலையில் நேற்று முன்தினம் தீடீரென உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான பிரச்சனை எனத் தகவல் வெளியானது. அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், “பார்த்தால் பசி தீரும் படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி. அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மூத்த நடிகை சௌகார் ஜானகிக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். 1950-ல் 'சௌகாரு' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த அவர், 1952-ல் 'வளையாபதி' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், தில்லு முல்லு மற்றும் ஹே ராம் எனப் பல படங்களில் அவர் நடித்துள்ளார். பிளாக் அண்ட் ஒயிட் காலம் தொடங்கி இன்றைய கலர் சினிமா வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து ஏழு தசாப்தங்களாக அவர் கலைப்பணியாற்றியுள்ளார்.