அமித்ஷா அடவைஸ்! விஜய் பிரதமரா? த.வெ.க. - காங்கிரஸ் விரிசல்!
"வ ச்சா குடுமி அடிச்சா மொட்டை'’ -இதுதான் த.வெ.க. ஸ்டைல். நடிகர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தால் என்ன நடக்கும் என யோசிக்காமல் சொன்னதன் விளைவாக த.வெ.க. கூட்டணி உடையும் நிலைக்கு சென்றிருக்கிறது. நாம் கடந்த இதழில், “விஜய் பிரதமர் வேட்பாளர் என இந்தியா முழுவதும் இந்தி மொழியில் ரீல்ஸ் பரப்பி வருகிறது த.வெ.க.” எனக் குறிப்பிட்டிருந்தோம். சட்டமன்றத்துக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை த.வெ.க.வின் நூறு நாள் ஆட்சியை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் பேசிய அமைச்சர்கள் விஜய்யை புகழ்ந்து தள்ளினார்கள். மூத்த அமைச்சரான செங்கோட்டையன் "விஜய் இந்தியாவை ஆள்வார்''’என்றார். பல்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ள சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, “"இன்றைய முதலமைச்சர் விஜய் நாளைய பிரதமர் ஆவார்''’என்றார். நிதியமைச்சர் மரிய வில்சன், “"இந்தியாவின் தேசியத் தலைவர் விஜய்''’என்றார். விஜய்யின் நெருங்கிய நண்பரும் மீன் வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத், "விஜய் பிரதமர் ஆவதை யாரும் தடுக்க முடி யாது''’என்றார். இதற்குப் பதி லளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், "காங்கிரஸ் கட்சிதான் விஜய் ஆட்சியைக் காப்பாற்றுகிறது. விஜய் 108 எம்.எல்.ஏ.க்களுடன் பெரும்பான்மை இல் லாமல் தவித்தபோது, அவர் ராகுல் காந்திக்கு போன் செய்தார். அப்போது தி.மு.க. கூட்டணியில் இருந்த காங் கிரஸ் அந்தக் கூட்டணியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதரவு அளித்தது. ராகுல் காந்தியின் இந்த செயல்தான் மற்ற கட்சிகளை த.வெ.க. பக்கம் வர வைத்தது. ராகுல்காந்தி மட்டும் அன்று விஜய்க்கு ஆதர வளிக்காமல் இருந்திருந்தால் கவர்னர் மூலம் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கி அமித்ஷா விளையாடியிருப்பார். அதையெல்லாம் மறந்துவிட்டு இன்று த.வெ.க. அமைச்சர்கள் பேசுகிறார்கள். பிரதமர் வேட்பாளர் என்றால் அது ராகுல் காந்திதான். விஜய் பிரதமர் என சினிமா ரசிகர் மன்ற மன நிலையில் பேசுவது தவறு. விஜய் கட்சிக்கு ஒரு எம்.பி.கூட இல்லை. அவரை எப்படி ‘இண்டியா’ கூட்டணியில் சேர்க்க முடியும்? இந்தியா கூட்டணியிலேயே சேர முடியாத ஒருவர் எப்படி பிரதமர் ஆக முடியும்?''’என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். அவர் மட்டும் அல்ல காங்கிரசின் மற்றொரு எம்.பி.யான ஜோதிமணியும், விஜய் பிரதமர் என்பதை விமர்சித்திருக்கிறார். “காங்கிரசின் இந்த எதிர்ப்பைப்பற்றி த.வெ.க. வாய் திறக்கவில்லை. ‘தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவார்’ என முதலில் சட்டமன்றத்தில் கூறிய ஆதவ் அர்ஜுனா, அதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதைப் பற்றி கருத்து சொல்லவில்லை. "மோடியா இந்த லேடியா?'’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதைப் போல, "விஜய்யா- ராகுலா' என ஒரு விவாதத்தை எழுப்ப விஜய் டீம் செய்த முயற்சி இன்று பெரிய பிரச்னை ஆகியுள்ளது. த.வெ.க.- காங்கிரஸ் கூட்டணி அமைய கடுமையாக உழைத்தவர் பிரவீன் சக்ரவர்த்தி. ராகுலின் கண்ணசைவில் தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக ‘சலங்கை கட்டி ஆடிய’ பிரவீன் சக்ரவர்த்தியும், மாணிக்கம் தாகூரும், ஜோதிமணியும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். ராகுல் சொல்லாமல் இவர்கள் மூவரும் வாய் திறக்கவே மாட்டார்கள். விஜய் பிரதமர் என்பதை ராகுல் விரும்பவில்லை. எனவே எதிர்த்துக் களமாடுங்கள் என ராகுல் போட்ட உத்தரவின் எதிர்விளைவாகவே தமிழக காங்கிரசார் பேசுகிறார்கள்” என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள். “இதற்கு பதில் சொல்லாமல் நிர்மல்குமார், "தி.மு.க. பா.ஜ.க.வுடன் இணைகிறது, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தி.மு.க. பா.ஜ.க.வை ஆதரிக்கிறது' என பிரச்னையை மடைமாற்றி விடுகிறார்கள். விஜய்யின் அனுமதி இல்லாமல் ‘விஜய் பிரதமர்’ என கோடிக்கணக்கில் செலவு செய்து இந்தியா முழுவதும் ரீல்ஸ்களை ஜெகதீஷ் பழனிச்சாமி இறக்கியிருக்கமாட்டார். யூனிபார்மாக அமைச்சர்களும் ‘விஜய் பிரதமர்’ என பேசியிருக்க மாட்டார்கள். விஜய் பிரதமர் என்றால் காங்கிரஸ் எதிர்க்கும் என்பது ஜான் ஆரோக்கியசாமி போன்ற வியூக அமைப்பாளர்களுக்கு தெரியும். இது ஒருவகையில் காங்கிரஸ் பிடியில் நாங்கள் இல்லை என அமித்ஷா போன்றவர்களுக்கு வெளிப்படுத்தும் தந்திரம். விஜய்யை சந்தித்த அமித்ஷா, “"முதலில் காங்கிரசை விட்டு வெளியே வாங்க, உங்க ஆட்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'’என விஜய்க்கு அட்வைஸ் செய்தார். ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைச் செயலாளர், சாய்குமார் ஐ.ஏ.எஸ்.சின் செயல்களை எதிர்த்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி ‘நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பொழுது காங்கிரசும் விஜய்யை எதிர்த்துள்ளது. தி.மு.க. பா.ஜ.க. பக்கம் சாயும் என சொல்லிவரும் த.வெ.க.வோ, ஆட்சியைக் காப்பாற்ற, பா.ஜ.க. கூட்டணி பக்கம் சாய வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. "இதெல்லாம் அமித்ஷாவின் திருவிளையாடல்கள்' எனச் சொல்கிறார்கள்’அரசியல் பார்வை யாளர்கள். “இதெல்லாம் விஜய்யின் டிராமாக்களில் ஒன்று. பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காண்பிப்பதில் விஜய் சிறந்தவர். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருந்து கொண்டே பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ். மூலம் பா.ஜ.க. ஆதரவு செயல்களை விஜய் தொடர்ந்து செய்து வருகிறார்’எனச் சுட்டிக்காட்டுகிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள். எது எப்படியோ “நித்திய கண்டம் பூரண ஆயுசு’என... தட்டுத்தடுமாறி நகர்ந்துகொண்டிருக்கிறது த.வெ.க. அரசு.

நடிகர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய விவகாரத்தில், த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி குறித்து எந்தவித ஆலோசனையுமின்றி விஜய் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டதே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அமித்ஷாவின் அறிவுரையைத் தொடர்ந்து த.வெ.க.வின் செயல்பாடுகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் இந்தி மொழியில் ரீல்ஸ் மூலம் விஜய்யை பிரதமர் வேட்பாளராக த.வெ.க. முன்னிறுத்தி வரும் நிலையில், இந்தக் கூட்டணி உடையும் நிலையை எட்டியுள்ளது.