ரேஷன் அரிசி தரத்தில் அதிரடி சோதனை...! தமிழகம் முழுவதும் அதிகாரிகள் குழு கள ஆய்வு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான அரிசி மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட வாரியாக சிறப்பு ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ள இந்தக் குழுக்கள், நேற்று முதல் அரிசி கிடங்குகளில் தீவிர ஆய்வைத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் சுமார் 3.75 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இந்த அரிசியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிலையில், நுகர்பொருள் வாணிபக் கழகம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்கிறது. பின்னர் அவை கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.ரேஷன் அரிசியின் தரம் குறைவாக இருப்பதாக அவ்வப்போது பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பாக கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை ஊழியர்கள் இடையே மாறுபட்ட கருத்துகளும் நிலவி வந்தன.இந்த நிலையில், சமீபத்தில் சட்டசபையில் நடைபெற்ற கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், தரமான அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்குச் சென்று, அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியின் தரம், இருப்பு மற்றும் விநியோகத்துக்கு ஏற்ற நிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று தொடங்கிய இந்த ஆய்வு நாளை வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் மூலம் தரக்குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்து பொதுமக்களுக்கு தரமான ரேஷன் அரிசி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான அரிசி விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய, மாவட்ட அளவில் சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவினர், அரிசி கிடங்குகளில் நேற்று முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தேவைக்காக மாதம் ஒன்றுக்கு சுமார் 3.75 லட்சம் டன் அரிசி பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.