கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு ரூ. லட்சக் கணக்கில் வரிச் சலுகை: இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீங்க
கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் நபர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E (Section 80E) மிகப்பெரிய வரிச் சலுகையை வழங்குகிறது. பெரும்பாலான வரி விலக்குகளுக்கு உச்சவரம்பு (Upper Cap) இருக்கும் சூழலில், இந்தச் சலுகைக்கு எவ்வித வரம்பும் இல்லை. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். பிரிவு 80E என்றால் என்ன? வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E, நீங்கள் செலுத்தும் கல்விக் கடனின் வட்டித் தொகையில் (Interest) எவ்வித உச்சவரம்பும் இன்றி முழு வரி விலக்கைப் பெற அனுமதிக்கிறது. *மாதத் தவணையில் (EMI) நீங்கள் செலுத்தும் வட்டிப் பகுதிக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். அசல் (Principal) தொகைக்கு வரிச் சலுகை கிடையாது. *ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ.2 லட்சம் வட்டி செலுத்தியிருந்தால், அந்த ரூ.2 லட்சத்தையும் உங்கள் வரி விதிக்கப்படக்கூடிய வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம். நீங்கள் கவனிக்க வேண்டிய 4 முக்கிய விதிகள் *வட்டி தொகையைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் ஆண்டிலிருந்து தொடர்ந்து 8 ஆண்டுகள் வரை மட்டுமே இந்த வரி விலக்கைக் கோர முடியும். அதற்குள் கடன் முழுமையாக அடைக்கப்பட்டால் அதுவரை மட்டுமே சலுகை கிடைக்கும். *நீங்கள் பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்து வரி தாக்கல் செய்தால் மட்டுமே பிரிவு 80E-ன் கீழ் விலக்கு பெற முடியும். புதிய வரி முறையில் (New Tax Regime) இந்தச் சலுகை கிடைக்காது. *தனிநபர் ஒருவர் தனது சொந்தக் கல்விக்காகவோ, தனது மனைவி/கணவன், பிள்ளைகள் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாப்பில் உள்ள மாணவரின் உயர் கல்விக்காகவோ வாங்கிய கடனுக்கு இந்த விலக்கைப் பெறலாம். 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ படிக்கும் படிப்புகள் இதற்குப் பொருந்தும். *அங்கீகரிக்கப்பட்ட வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC0 அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கு மட்டுமே இந்த விலக்கு உண்டு. நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் வாங்கிய கடனுக்கு வரி விலக்கு கோர முடியாது. வரித் தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள் வரி தாக்கல் செய்வதற்கு முன் பின்வரும் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்: *வங்கியிலிருந்து பெறப்பட்ட வட்டிச் சான்றிதழ் (Interest Certificate). *அசல் மற்றும் வட்டிப் பிரிவைக் காட்டும் கடன் திருப்பிச் செலுத்தும் அட்டவணை (Repayment Schedule). *வங்கியின் கணக்கு அறிக்கை (Statement of Account). வரி செலுத்துவோர் செய்யும் பொதுவான தவறுகள் *சிலர் தவறுதலாக கடனின் அசல் தொகையையும் வரிச்சலுகைக்கு கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். இது அனுமதிக்கப்படாது. *சிலர் வங்கி வழங்கிய சான்றிதழில் உள்ளதைவிட அதிக வட்டித் தொகையை வரிச்சலுகையாகக் கோருகின்றனர். *நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் வாங்கிய கடனுக்கு வரி விலக்கு கோருவது சட்டப்படி செல்லாது. *கடனை கூட்டாகத் (Joint Loan) திருப்பிச் செலுத்தும்போது, ஒரே வட்டித் தொகையை இருவர் கோருவது வருமான வரித் துறையின் நோட்டீஸுக்கு வழிவகுக்கும். கல்விக் கடனுக்கான வட்டி விலக்கைச் சரியாகப் திட்டமிட்டு, பழைய வரி முறையின் கீழ் தாக்கல் செய்வதன் மூலம், உங்கள் கல்விக் கடனின் உண்மையான சுமையைக் கணிசமாகக் குறைக்க முடியும்!

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E-ன் கீழ், கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையைப் பெறுவதில் பிற வரி விலக்குகளைப் போல எந்தவித உச்சவரம்பும் இல்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.
கல்விக் கடனுக்காகச் செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு இந்தச் சட்டத்தின் கீழ் முழுமையான வரி விலக்கைப் பெற முடியும். எனினும், இச்சலுகையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் இதைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.