“ட்ரோல் பண்ணலாம்னு தானே இதெல்லாம் செய்றீங்க” - அமைச்சர் என்.ஆனந்த் கலகல பேச்சு!
தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (19-08-26) நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன், நீர்வளம், ஊரக வளர்ச்சி ஆகிய துறை சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தது மட்டுமல்லாமல் அத்துறைகளின் அமைச்சர் என்.ஆனந்த்தை நகைச்சுவையாக கிண்டலடித்துப் பேசினார். இது குறித்து எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் பேசுகையில், “உள்ளாட்சி துறை மிக முக்கியமான துறை. அந்த துறையின் அமைச்சர் நல்ல அமைச்சராக இருக்கிறார். அவருடன் பழக்கம் இல்லை, ஆனால் நல்லா பேசி பேசி சமாளித்துவிடுகிறார். பத்திரிகையாளர்களை கண்டால் ஏன் இப்படி வேகமாக போறாருன்னு தெரியல. பத்திரிகையாளர்களை கண்டால் கிடு கிடு கிடுன்னு போயிடுறாரு. எந்த பத்திரிகைக்கும் பதில் சொல்ல மாட்டிக்கிறார். அது ஒரு புது டெக்னிக் தான்” என்று நகைச்சுவையாக பேச அவையில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்துப் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “பத்திரிகையை கண்டால் ஓடிடுகிறேன் என்று அண்ணன் சொன்னார். நீங்க தனியாக ஒரு நிறுவனமே வச்சுருக்கீங்க. இப்படி எல்லாம் கேள்வி கேளுங்க, இவங்கள விடாதீங்க.. ஏதாவது எடக்கு முடக்கா கேட்டு அதை எப்படியாவது ட்ரோல் செய்யலாம் என்ற ஒரே ஒரு நோக்கத்திலேயே தான் பத்திரிகையை கேள்வி கேட்கவிடுறீங்க.. இதுக்கெல்லாம் நாங்கள் ஓடவில்லை, பயப்படவில்லை. நாங்கள் எங்கள் முதல்வர் பாணியில் எதுவாக இருந்தாலும் சாதித்து காட்டுவது மட்டும் தான் எங்களுடைய நோக்கமாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் எல்லாருமே நண்பர்கள், நல்லவர்கள், அவர்கள் மீது தப்பெல்லாம் சொல்லவில்லை. என்ன இருந்தாலும் 50 வருடமாக உங்களுடனே அவர்கள் டிராவல் பண்ணிட்டாங்க. இனிமேல் எங்களுடன் டிராவல் பண்ணுவாங்க. அதனால் எங்களுக்கு அந்த பயம் எல்லாம் இல்லை. தேவையில்லாமல் எதுவும் பேசக்கூடாது, வேலையை முடிக்கணும் மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும். எங்கள் முதல்வருடைய அறிவுறுத்தல்படி நாங்கள் நடந்துகொள்ள வேண்டும்” என கலகலப்பாகப் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 19, 2026) நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் குறித்து உரையாற்றினார்.
இந்த விவாதத்தின் இடையே, அமைச்சர் என்.ஆனந்த் கலகலப்பான முறையில் பேசினார். அப்போது, "இதையெல்லாம் நீங்கள் என்னை டிரோல் செய்யத்தானே செய்கிறீர்கள்?" என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டது அவையில் கவனத்தை ஈர்த்தது.