8 வருட முயற்சி பலித்தது; மதுரை மக்களுக்கு மிகப்பெரிய வெற்றிச்செய்தி கூறிய சு.வெங்கடேசன் எம்.பி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நிலம் வகை மாற்றம் செய்யக் கோரி கடந்த 8 ஆண்டுகளாக தொடர் முயற்சி நடத்தி வந்த நிலையில், பழைய ராமநாதபுரம் ஆட்சியரக இடம் நிலமாற்றம் செய்யப்பட்டதோடு, அண்ணா பேருந்து நிலைய நிலத்தை வழங்கும் தீர்மானமும் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என சி.பி.எம் எம்பி சு.வெங்கடேசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய நிதியொதுக்கீடு செய்ததற்காக தமிழக முதல்வர் விஜய்க்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.எம். எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாவது: “மிக மிக முக்கியமான ஒரு செய்தி, மதுரை மக்களுக்கும் தென் மாவட்ட மக்களுக்குமான ஒரு மிகப்பெரும் வெற்றி செய்தி. ஆறு-ஏழு ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று ஏழு ஆண்டுகளில் விடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்த ஒரு பெரிய முயற்சி என்பது நம்முடைய அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்களை உருவாக்குவது ஆகும். குறிப்பாக அண்ணா பேருந்து நிலையம் இருக்கிற பகுதியில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ மையத்தை உருவாக்க சுமார் ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்ய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரோடு பேசி அவர்கள் கொடுக்க தயாராக இருந்தார்கள். ஆனால், அந்த இடத்தை அரசு மருத்துவமனைக்கு வகை மாற்றம் செய்ய கடந்த நான்கு ஆண்டுகள் பல முயற்சிகள் எடுத்தோம். அது எதுவுமே நடைபெறவில்லை. அதேபோல, மாவட்ட ஆட்சியரகத்தில் இருக்கிற பழைய ராமநாதபுரம் ஆட்சியரகம் இடத்தையாவது அரசு மருத்துவமனைக்கு கொடுங்கள் என்று அதற்கும் தொடர்ந்து முயற்சி எடுத்தோம், அதுவும் நடைபெறவில்லை. மதுரையினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மதுரையினுடைய மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு கூட்டத்தினுடைய திசாவின் தலைவர் என்ற முறையில் நடந்த 8 கூட்டங்களில் தொடர்ந்து மாநில நிர்வாகத்தோடு பல அழுத்தங்களை கொடுத்தோம். எதுவுமே நடைபெறவில்லை. ஆனால், இப்பொழுது கடந்த இண்டு கூட்டத்தில் தொடர்ந்து எடுத்த முயற்சியால், இரண்டு மிகப்பெரிய வெற்றி நமக்கு கிடைத்திருக்கிறது. ஒன்று மதுரை ஆட்சியரகம் இருக்கிற ராமநாதபுரம் பழைய ஆட்சியரகத்தின் இடம் என்பது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வகை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை என்பது இன்றைக்கு அமலுக்கு வந்திருக்கிறது. இரண்டு மதுரை அண்ணா பேருந்து நிலையத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நிலத்தை வகை மாற்றம் செய்வதற்கான தீர்மானம் நேற்றைக்கு மதுரை மாநகராட்சியிலே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த இரண்டும் கடந்த 8 ஆண்டுகள் நடந்த போராட்டம் சிலவேளை சந்தோஷமாக இருக்கும். இது காலகாலத்துக்கும் மதுரை மக்களுக்கு செய்கிற ஒரு நன்மை. ஒருக்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு ஒன்றிய அரசு ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அந்த நிதியில் 8 மாடி கட்டடம் வரப்போகிறது. அதேபோல மாண்புமிகு தமிழகத்தினுடைய முதல்வர் விஜய் ரெண்டு நாளைக்கு முன்னாடி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ரூ.84 கோடி செலவில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டப்படு என்று அறிவித்திருக்கிறார். அதுவும் நம்முடைய பழைய ராமநாதபுரம் ஆட்சியரகம் பகுதியில் வர இருக்கிறது. இந்த இரண்டுக்கும் சேர்த்து ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது நம்முடைய தலைமுறைக்கு நாம் செய்திருக்கிற மிகப்பெரிய நன்மை. எனவே இந்த பணியில் ஈடுபட்ட எல்லோருக்கும் எனது நன்றி. குறிப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி எங்களுடைய ஏழு ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதே போல, இதற்கு முயற்சி செய்த நம்முடைய மாவட்ட அமைச்சர்கள் குறிப்பாக ஆட்சியராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இதை நிறைய முறை பேசி, இதைத்தொடர்ந்து கண்காணித்து இந்த வேலையை செய்து கொடுத்து இருக்கிறார். மதுரை ராஜாஜி மருத்துவமனையின் டீன் மற்றும் புற்றுநோய் பிரிவின் மருத்துவர்கள் இந்த திட்டம் விட்டால் போய்விடும் என்று எப்படியாவது வாங்குங்கள் என்று அனைவரும் மதுரை மக்களின் நலனுக்காக செய்திருக்கிறார்கள். இந்த வெற்றி செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பணி விரைவாக நடத்தி முடித்து, அந்த வெற்றி விழா மதுரையின் விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சு.வெங்கடேசன் கூறினார். மதுரை மக்களுக்காக நாங்கள் நடத்திய பல்லாண்டு முயற்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி! மதுரை அண்ணா பேருந்து நிலையம் மற்றும் மதுரை ஆட்சியரக வளாகம் (பழைய இராமநாதபுரம் ஆட்சியரகம்) ஆகிய இரண்டு இடங்களும் அரசு இராசாசி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ. 44... pic.twitter.com/7GFMTxpgc3 — Su Venkatesan MP (@SuVe4Madurai) August 25, 2026 இது தொடர்பாக சி.பி.எம் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டிருப்பதாவது: “மதுரை மக்களுக்காக நாங்கள் நடத்திய பல்லாண்டு முயற்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. மதுரை அண்ணா பேருந்து நிலையம் மற்றும் மதுரை ஆட்சியரக வளாகம் (பழைய ராமநாதபுரம் ஆட்சியரகம்) ஆகிய இரண்டு இடங்களும் அரசு இராசாசி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.44 கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.86 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இதைச் சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மதுரை மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள். இதற்காக நாங்கள் எடுத்த தொடர் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய அமைச்சர் நிர்மல்குமாருக்கும், மாவட்ட ஆட்சியர், மதுரை அரசு இராசாசி மருத்துவக்கல்லூரி முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். நம் தலைமுறைக்குச் செய்யப்பட்ட மிகச்சிறந்த இந்தப் பணிக்குத் துணை நின்ற அனைவருக்கும் தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்காக, கடந்த 8 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நில வகை மாற்ற முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. பழைய ராமநாதபுரம் ஆட்சியரக இடத்தின் நிலமாற்றம் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அண்ணா பேருந்து நிலையத்தின் நிலத்தை மருத்துவமனைக்கு வழங்கவும் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந்த நீண்டகால கோரிக்கை நிறைவேறியது மதுரை மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிச் செய்தியாக அமைந்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.