விவசாயிகள் மீது த.வெ.க அரசுக்கு அக்கறை இல்லை; நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25000 நிவாரணம் வழங்க வேண்டும்– இ.பி.எஸ்
விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகேதாட்டு பிரச்சினையில் மெத்தனம் காட்டி வருவதுடன், காவிரியில் தமிழகத்துக்கு பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க அரசை கண்டித்தும் அ.தி.மு.க சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று (ஆக.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது; தமிழகத்தின் நெற்களஞ்சியமான, பொன் விளையும் பூமியான தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம், வழக்கமான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால். இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. புதிதாக ஆட்சிக்கு வந்த த.வெ.க அரசு, தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த அரசு ரீல்ஸ் மோகத்தில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீரை, தமிழக அரசு கேட்டுப் பெறவில்லை, இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டாவில் 5.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நிலத்தடி நீர் மட்டத்தை நம்பி 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்தனர். அதற்கும் மும்முனை மின்சாரம் போதிய அளவு வழங்காத காரணத்தால் சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டு கருகிவிட்டது. எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நன்மையைக் கருதி ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கடன் பெற்றிருந்தாலும் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய நடைமுறையில், குறைந்த கடன் தொகை பெற்ற ஒருவருக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் நிலை உள்ளது. தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனில் 50 சதவீதத்தையாவது உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். கர்நாடகா அரசு மேகேதாட்டு அணைக் கட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டாவில் இருக்கிற விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய ஏதுவாக, தமிழக அரசு விரைவாக, வேகமாக, துரிதமாகச் செயல்பட்டு, கும்பகர்ணனைப் போல் தூங்காமல், த.வெ.க அரசு விழிப்போடு இருந்து, விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்யத் தேவையான நீரை கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டும். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாகக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வறட்சி நிலவும் இக்காலத்தில் ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாடத்தில் வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். இதேபோல் கோவை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சே.வேலுசாமி, அ.தி.மு.க சட்டமன்றக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ஜுனன், ஜெயராம், அருண்குமார், கந்தசாமி, உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும், காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. செய்தி: க.சண்முகவடிவேல் மற்றும் ரஹ்மான்

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மேகேதாட்டு விவகாரத்திலும் காவிரி நீர் பங்கீட்டிலும் த.வெ.க அரசு மெத்தனமாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி அதிமுக சார்பில் இன்று (ஆக.14) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
விவசாயிகள் மீது தற்போதைய அரசுக்கு அக்கறை இல்லை என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தப் போராட்டத்தில் அவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார்.