PulseNews
வணிகம்

சட்ட மன்றத்தில் விலைவாசி உயர்வு பிரச்சனை: 'மளிகை கடை பக்கமே போக முடியல': உதயநிதி, இ.பி.எஸ், அமைச்சர் வெங்கட ரமணன் காரசார விவாதம்

வெள்ளிக் கிழமை தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது எதிர்க் கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் அவையில் பேசினர். உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”அத்தியாவசியப் பொருட்களுடைய விலைவாசி தற்போது நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கின்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை எந்தப் பொருளை எடுத்தாலும் கடந்த மூன்று மாதங்களில் விலை பல மடங்கு உயர்ந்திருக்கின்றது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றார்கள். குறிப்பா இந்த அரசு அமைஞ்சதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுடைய விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. மே மாதம் 1 கிலோ அரிசி ரூ.55-க்கு விற்பனையானது, இன்னைக்கு ரூ.75. மே மாதம் 1 கிலோ வெங்காயத்துடைய விலை ரூ.40, இன்றைக்கு கிலோ ரூ.80. மே மாதம் 1 கிலோ துவரம்பருப்பு ரூ.150, இன்றைக்கு கிலோ ரூ.180. மே மாசம் 1 கிலோ சர்க்கரை ரூபாய் 40, இன்றைக்கு ஒரு கிலோ சுமார் ரூ.70 வரைக்கும் உயர்ந்திருக்கு. இந்த விலையேற்றத்தைப் பார்த்து மக்கள் மிகவும் பாதிப்படைஞ்சிருக்காங்க. மளிகைக் கடைப் பக்கம் போறதையே குறைச்சிட்டு இருக்காங்கன்னு செய்திகள் வந்துட்டு இருக்கு. உங்களுடைய ஆளுங் கட்சியுடைய கூட்டணியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் இதைக் கண்டித்து போராட்டம் நடத்தி இருக்காங்க. இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு 2007-ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது. அப்பொழுது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக் கூடாது என்பதற்காக சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஒன்றை அறிவித்தார்கள். அந்தத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பருப்பு, எண்ணெய், ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை சந்தை விலையை விட குறைவான விலைக்கு அன்றைக்கு மக்களுக்கு வழங்கினார்கள். அதுமட்டுமில்ல கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 10 மளிகைப் பொருட்களை ரூ.50-க்கு வழங்கினார்கள். தலைவர் கலைஞர் 2007-இல் தொடங்கி வைத்த அந்தச் சிறப்பு பொது விநியோகத் திட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தற்போது வழங்கப்படுகின்ற அளவை விட இன்னும் கூடுதல் அளவு வழங்கிட இந்த அரசு ஆவன செய்ய வேண்டும் என்று உங்கள் மூலமாகக் கேட்டுக்கொண்டு, முக்கியமாக முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறையுடைய அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்ற வகையில் ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு இந்த அரசு உடனடியாக ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று இந்த அவையின் கவனத்தை ஈர்க்கின்றேன்” என்று பேசினார். எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தற்போது அரிசி விலை ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்திருக்கின்றது. ஒரு கிலோவுக்கு கிட்டத்தட்ட 48 ரூபாய்க்கு விற்பனை செய்திருந்த சர்க்கரை இன்றைக்கு 72 ரூபாய்க்கு விக்கின்றது. மஞ்சள் 1 கிலோ 200-க்கு விற்பனை செய்து கொண்டிருந்தது, இப்ப 250-க்கு விக்குது. மிளகாய் ஒரு கிலோ 200-க்கு விற்பனை செய்திருந்தது... தேர்தலுக்கு முன்பு, இந்த ஆட்சி வந்த பிறகு தற்போது விலை ரூ.300-க்கு விக்குது. வெல்லம் 1 கிலோ ரூ.55-க்கு வித்தது, இப்ப ரூ.75-க்கு விக்குது. அதேபோல புளி 1 கிலோ ரூ.150-க்கு வித்தது, இப்ப ரூ.250-க்கு விற்பனை செய்கிறது. பருப்பு வகையிலும் கிட்டத்தட்ட விலை அதிகம். எண்ணெய் விலை 40% உயர்ந்திருக்குது. இதனால ஏழை எளிய மக்கள் கடுமையா பாதிக்கிறாங்க. இப்ப வறட்சி நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆந்திராவில இருந்து நமக்கு அரிசி கிடைக்கும், அங்கேயும் வறட்சி இருக்கின்ற காலகட்டத்தில் அங்கே வருகின்ற அரிசியுடைய வரவும் குறைஞ்சு போச்சு. அரசாங்கம் ஏற்கனவே அதிமுக அரசு இருக்கின்ற பொழுது, இந்த விலையேற்றம் ஏற்படுகின்ற பொழுது எந்த உணவுப் பொருள் விலையேறுகின்றதோ அந்த உணவுப் பொருள் எந்த மாநிலத்தில் விலை குறைவாக இருக்கிறதோ அங்கே போய் கொள்முதல் செய்து, கூட்டுறவுச் சங்கத்தின் மூலமாக தமிழகத்திற்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்து அந்த விலையேற்றத்தைத் தடுக்கும். அதற்காக 'விலைக் கட்டுப்பாட்டு நிதியம்' என்ற ஒரு நிதியை ஒதுக்கி, அதுக்கு 100 கோடி ரூபாய் கூட்டுறவுச் சங்கத்துக்குக் கொடுக்கப்பட்டு அதை பயன்படுத்தி வந்த காரணத்தினாலே, விலை இப்படி அத்தியாவசிய உணவுப் பொருள் விலை ஏறுகின்ற பொழுது அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். அதைப் போல இந்த அரசும் இந்த உணவுப் பொருள் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்கிறதா என தாங்கள் வாயிலாக அரசினுடைய கவனத்தை ஈர்க்கின்றேன்" என்று கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் பேசுகையில், “தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டாலும், அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு வருத்தமளிக்கிறது. பொங்கல் தொகுப்பு வழங்குவது போல், மாதம் மாதம் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்” என்றார். அமைச்சர் வெங்கட் ரமணன் பதில் எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட் ரமணன் பதிலளித்து உரையாற்றினார்: ”ஈரானியப் போர் சூழலினாலும், பெட்ரோல்-டீசல் வரத்து குறைவாக இருப்பதாலும் இந்த விலையேற்றம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. குறிப்பா சர்க்கரை. மகாராஷ்டிரா, கேரளா போன்ற அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்களோடு ஒப்பிடும்போது கூட இங்கே 2 ரூபாய் குறைவாகத்தான் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்து இடங்களிலும் உயர்ந்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் உள்ள குழுவில், இந்த அரசில் வாராவாரம் மற்றும் தினந்தோறும் சுமார் 41 பொருட்களுக்கு உண்டான விலை மாற்றங்களை கண்காணித்து வருகிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இருக்கிற விலையைச் சேகரித்து, சராசரி கணக்கிட்டு அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு வரை அனைத்து உணவுப் பொருட்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்கெல்லாம் விலை அதிகமாக இருக்கிறதோ, அந்தப் பொருட்களையெல்லாம் கண்டறிந்து கடந்த ஆட்சியின் நல்ல நடைமுறைகளைப் பின்பற்றி, மக்களுக்கு எளிதாகச் சென்றடையவும் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும் தீவிரமாகச் செயல்படுகிறோம். நேற்றுக் கூட வெங்காய விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்து கூட்டத்தில் விவாதித்தோம். பண்டிகைக் காலங்களிலோ அல்லது டீசல் விலையேற்றத்தினாலோ அல்லது விளைச்சல் குறைபாட்டினாலோ விலை உயர்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறோம். இன்னும் 2-3 நாட்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரேஷன் கடைகள் மட்டுமல்லாமல், அங்கன்வாடி மற்றும் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள் மூலமாகவும் மலிவு விலையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்காகச் செயலாற்றும் இந்த அரசு, எந்தவிதமான விலை உயர்வோ அல்லது பொருட்கள் தட்டுப்பாடோ ஏற்படாதவாறு மிக விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். விலைவாசி உயர்வு குறித்தான இந்த விவாதம் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சட்ட மன்றத்தில் விலைவாசி உயர்வு பிரச்சனை: 'மளிகை கடை பக்கமே போக முடியல': உதயநிதி, இ.பி.எஸ், அமைச்சர் வெங்கட ரமணன் காரசார விவாதம்
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தொடரில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. அப்போது அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் காய்கறிகளின் விலை கடந்த சில மாதங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்த விவாதத்தின் போது, மளிகைக் கடைக்கே செல்ல முடியாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் வெங்கடாசலம் ஆகியோருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business