வாட்டாள் நாகராஜ் கைது!
தமிழ்நாட்டிற்கு உரியக் காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதே சமயம், தமிழ்நாட்டிற்குத் தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மற்றொருபுறம் கர்நாடக அரசு சார்பில் மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் உள்ள பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இன்று (13.08.2026) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் மாண்டியா பகுதியை மையமாக வைத்து கடையடைப்பு, இருசக்கர வாகனப் பேரணி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்து விடக் கூடாது என்று கன்னட சலவலி வத்தல் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான பல்வேறு கன்னட அமைப்புகள், போராட்டம் நடத்த தயாராகியிருந்தனர். இந்நிலையில் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள வாட்டாள் நாகராஜின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, கன்னட அமைப்புகள் பொதுமக்களை எந்த வகையிலும் அச்சுறுத்தக் கூடாது என்றும், அவர்களை வற்புறுத்தி போராட்டங்களில் கலந்து கொள்ளச் செய்யக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில்தான் வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் பேருந்துகளுக்குத் தேவையான பாதுகாப்பு காவல்துறை சார்பில் வழங்கக் கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் திடீரென நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறையினர், போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மற்றொருபுறம் பெங்களூருவிற்குச் செல்லக்கூடிய பேருந்துகள் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்ல முயன்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாகப் பயணிகள் ஜூஜுவாடி எல்லைப் பகுதியில் இருந்து கர்நாடகா பகுதிக்கு நடந்து செல்லும் நிலை உருவானது. இதனையடுத்து தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான போக்குவரத்து முழுமையாக சீரடைந்து ஜூஜுவாடி எல்லைப் பகுதி வழியாகச் செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்குத் தர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பைத் தொடர்ந்து கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.