93% திட்டங்களில் மதிப்பீட்டு செலவுகளை உயர்த்திக் காட்டிய மத்திய பொதுப்பணித் துறை; ரூ.513 கோடி கூடுதல் நிதி: சி.ஏ.ஜி அறிக்கை
எழுதியவர்: தாமினி நாத் திட்டங்களின் செலவு மதிப்பீடு மற்றும் டெண்டர் விடுவதற்கான அடிப்படையான 'விலைப் பட்டியலை' நிர்ணயிப்பதில் மத்திய பொதுப்பணித் துறையின் (சி.பி.டபிள்யூ.டி) நடைமுறைகளில் உள்ள "முரண்பாடுகளை" இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சி.பி.டபிள்யூ.டி மதிப்பீடுகளை விடக் குறைவான செலவிலேயே 93% திட்டங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் படிக்க: மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும் சேவை அமைச்சகங்கள் குறித்த தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த சி.ஏ.ஜி, சி.பி.டபிள்யூ.டி -யின் டெல்லி விலைப் பட்டியல் (டி.எஸ்.ஆர்) 2021-ல் குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் யதார்த்தமற்றவை என்று கண்டறிந்துள்ளது. 2021-ல் இந்த விலைப் பட்டியலைத் திருத்துவதற்கு முன்பு சி.பி.டபிள்யூ.டி எந்தவொரு சந்தை ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது. "அடிப்படை விலைகளைச் சேகரிக்க சி.பி.டபிள்யூ.டி பின்பற்றிய நடைமுறை யதார்த்தமானதாக இல்லை. ஜனவரி 2022 முதல் ஜனவரி 2023 வரையிலான காலத்தில், மொத்தம் உள்ள 5,011 பணிகளில், 4,666 பணிகள் அல்லது 93% பணிகள், டி.எஸ்.ஆர் 2021-ன் படி தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டுச் செலவை விடக் குறைவான ஒப்பந்தப் புள்ளிகளுக்கே வழங்கப்பட்டுள்ளன" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. ஒரு துல்லியமான விலைப் பட்டியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள சி.ஏ.ஜி கணக்கிடப்பட்ட திட்டச் செலவுகளின் அடிப்படையிலேயே சி.பி.டபிள்யூ.டி -யின் பட்ஜெட் அமைகிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளது. இத்துறையின் பட்ஜெட் மதிப்பீடுகள் 2020-21-இல் ரூ.2,027.33 கோடியிலிருந்து, 2021-22-ல் ரூ.3,100.57 கோடியாகவும், 2022-23-இல் ரூ.4,314.08 கோடியாகவும் உயர்ந்துள்ளது. “விலைப் பட்டியலில் உள்ள பொருட்களின் விலைகள் நிலவும் சந்தை விலைகளை விட அதிகமாக இருந்தால், திட்டத்தின் மதிப்பீட்டுச் செலவு அதிகரிக்கும்; இது ஒப்பந்ததாரருக்கு தேவையற்ற சாதகமான பலனை அளிக்கக்கூடும்” என்று எச்சரித்துள்ள அந்த அறிக்கை, பொதுநிதி பெருமளவில் ஈடுபடுத்தப்படுவதால் மதிப்பீடுகளின் துல்லியம் மிகவும் அவசியமானது என்றும் சேர்த்துக் கூறியுள்ளது. ஒப்பந்ததாரரின் லாபம் மற்றும் இதரச் செலவுகளைக் கணக்கிடுவதில் உள்ள "தவறான நடைமுறை" குறித்தும் சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய பொதுப்பணித் துறையின் திட்ட மதிப்பீட்டு நடைமுறைகளில் பல முரண்பாடுகள் இருப்பதாக இந்திய தலைமை தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். திட்டங்களுக்கான செலவு மதிப்பீடு மற்றும் டெண்டர் விடுவதற்கான அடிப்படை விலைப் பட்டியலை நிர்ணயிப்பதில் இந்த குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.
சி.பி.டபிள்யூ.டி நிர்ணயித்த மதிப்பீடுகளை விடக் குறைவான செலவிலேயே 93 சதவீத திட்டங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மதிப்பீட்டு செலவுகளை உயர்த்தி காட்டி, தேவையற்ற வகையில் 513 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது தணிக்கை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.