தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகத்தில் கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முகவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், சில்லறை கடைகளில் பொதுமக்களின் தேவைக்கேற்ப ஆவின் பாலை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆவின் பாலை தொடர்ந்து பயன்படுத்தி வந்த பொதுமக்கள், வேறு வழியின்றி தனியார் நிறுவனங்களின் பாலை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மட்டுமின்றி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் சேகரிக்கப்பட்டு, ஒன்றியத்தில் பதப்படுத்தப்பட்டு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட முகவர்கள் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், முகவர்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேட்டதில் பாதி பால் மட்டுமே கிடைக்கிறது

இதுகுறித்து சிறு வணிகர்கள் கூறியதாவது: ஆவின் பால் தரமானதாக இருப்பதால், பொதுமக்கள் தொடர்ந்து அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆவின் ஜங்ஷன் விற்பனை நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பால் வாங்கி, தங்களது கடைகளில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்.

ஆனால், கடந்த சில நாட்களாக பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கேட்கும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வழக்கமாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவு ஆவின் பாலை வழங்க முடியவில்லை. ஒரு சில கடைகளில் பால் முழுமையாக கிடைக்காததால், வாடிக்கையாளர்களின் தேவையை சமாளிக்க வேறு வழியின்றி தனியார் நிறுவனங்களின் பாலை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆவின் ஜங்ஷனில் தகராறு

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் ஆவின் ஜங்ஷன் விற்பனை நிலையத்திலும் கடந்த சில நாட்களாக போதிய அளவு பால் கிடைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காலை, மாலை நேரங்களில் பால் வாங்குவதற்காக ஏராளமானோர் திரள்வதால், பால் கிடைக்காதது தொடர்பாக பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்படும் சூழலும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

உற்பத்தி குறைவுக்கு காரணம் என்ன?

பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கைகள் தேவை என்று சிறு வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கரவை மாடுகளுக்கு வழங்கப்படும் கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோல், ஆவின் பால் டிப்போக்களில் புதிய அட்டை பதிவு செய்ய பொதுமக்கள் முயற்சிக்கும்போது, தற்போது புதிய அட்டை பதிவு செய்யப்படுவதில்லை என்று அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரூ.48 ஆவின் பால்... ரூ.74 வரை தனியார் பால்!

ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.48-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தட்டுப்பாடு காரணமாக ஆவின் பால் கிடைக்காத பொதுமக்கள் தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களின் பால் ஒரு லிட்டர் ரூ.65 முதல் ரூ.74 வரை விற்பனை செய்யப்படுவதாக சிறு வணிகர்கள் தெரிவித்தனர். இதனால் குறைந்த விலையில் கிடைக்கும் ஆவின் பாலை வாங்க முடியாமல், அதிக விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

போட்டியை அதிகரிக்கும் தனியார் பால் நிறுவனங்கள்

பால் உற்பத்தியாளர்களை தங்களது பக்கம் ஈர்ப்பதில் தனியார் பால் நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் வணிகர்கள் கூறுகின்றனர்.

பால் உற்பத்தியாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று பாலை கொள்முதல் செய்வதுடன், அதற்கான தொகையையும் உடனுக்குடன் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்களும் தனியார் நிறுவனங்களிடம் பாலை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு மாற்றாக ஆவின் நிர்வாகமும் பால் உற்பத்தியாளர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு தேவையான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும். மாடுகளுக்கான தீவனத்தை மானிய விலையில் வழங்கி, பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“மீண்டும் முழுமையாக பால் வழங்க வேண்டும்”

தட்டுப்பாடு காரணமாக சில்லறை கடைகளில் ஆவின் பால் தொடர்ந்து கிடைக்காத நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தனியார் பாலை பயன்படுத்துவதற்கு பழகிவிடும் வாய்ப்பு உள்ளது. இது ஆவின் விற்பனையையும், அரசின் கூட்டுறவு பால் நிறுவனத்தின் வருவாயையும் பாதிக்கக்கூடும் என சிறு வணிகர்கள் தெரிவித்தனர்.

எனவே, ஆவின் அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பால் உற்பத்தி மற்றும் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முகவர்களுக்கு முன்பு வழங்கிய அளவிலேயே பால் பாக்கெட்டுகளை வழங்கி, சில்லறை கடைகளில் பொதுமக்களுக்கு போதுமான அளவு ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முகவர்களுக்குக் கிடைக்கும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால், சில்லறை விற்பனை கடைகளில் தேவையான அளவு பாலைப் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தொடர்ச்சியாக ஆவின் பாலைப் பயன்படுத்தி வந்த மக்கள், இந்தத் தட்டுப்பாட்டினால் மாற்று வழியின்றி தனியார் பால் நிறுவனங்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் தங்களது விற்பனையைத் தீவிரப்படுத்தி வருகின்றன.