PulseNews
வணிகம்

திருவான்மியூர் டூ உத்தண்டி... ரூ.2,100 கோடி ஈ.சி.ஆர் மேம்பாலத்துக்கு வந்தது ‘பிரேக்’; என்ன காரணம்?

திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த உயர்மட்ட வழித்தடப் பணிகள் உடனடியாக தொடங்குவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 2026-27ஆம் நிதியாண்டுக்கான கொள்கைக் குறிப்பில், கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் பட்டியலில் இந்தத் திட்டம் இடம்பெறவில்லை. இதனால், திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்டப் பாலம் திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நெடுஞ்சாலைத் துறையின் புதிய கொள்கைக் குறிப்பில் அண்ணாசாலை மேம்பாலம், சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு, சென்னை–கன்னியாகுமரி தொழில் வழித்தடம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்கும், ஆவடி, குன்றத்தூர், கொரட்டூர், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிரேடு பிரிப்பான்கள் மற்றும் ஸ்பில்ஓவர் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட வழித்தடத் திட்டம் இடம்பெறாதது, அதன் தற்போதைய நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு திட்டம் கொள்கைக் குறிப்பில் இடம்பெறவில்லை என்றால், அது உடனடியாக நடைமுறைக்கு வரும் வாய்ப்பு குறைவு. இந்தத் திட்டம் தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை அந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் முழுமையாக நியமிக்கப்படவில்லை. மேலும், திட்டப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றார். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சுமார் 13 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கத் திட்டமிடப்பட்ட இந்த உயர்மட்டப் பாலம், சென்னை தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முக்கியத் திட்டமாகக் கருதப்பட்டது. குறிப்பாக, கிழக்குக் கடற்கரைச் சாலையில் தினசரி அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து, குடியிருப்புப் பகுதிகளின் விரிவாக்கம், சுற்றுலா மற்றும் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டம் ஹைப்ரிட் ஆன்யூட்டி மாடல் (HAM) முறையில் செயல்படுத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, திட்டச் செலவில் சுமார் 60 சதவீதத்தை தனியார் ஒப்பந்ததாரரும், மீதமுள்ள 40 சதவீதத்தை அரசும் ஏற்கும் வகையில் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஒப்பந்ததாரர் கடன் உள்ளிட்ட நிதி ஏற்பாடுகளைச் செய்து, கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களையும் திரட்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், திட்டத்தின் ஒப்பந்தம், செலவு மதிப்பீடு மற்றும் எதிர்கால போக்குவரத்துத் தேவைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டால் ஒப்பந்ததாரருக்கு ஏற்படக்கூடிய இழப்பீடு மற்றும் எதிர்காலத்தில் நடுவர் தீர்ப்பு நடவடிக்கைகள் போன்ற சட்டரீதியான சிக்கல்கள் குறித்தும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். “ஒப்பந்ததாரர் ஏற்கனவே கடன் பெற்று பணிகளைத் தொடங்குவதற்கான இயந்திரங்களைத் திரட்டியுள்ளார். எனவே, ஒப்பந்தத்தை நிறுத்துவது தொடர்பாக பின்னர் சட்டரீதியான பிரச்சினைகள் அல்லது நடுவர் தீர்ப்பு நடவடிக்கைகள் ஏற்படுமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நிபுணர் குழு என்ன பரிந்துரைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், சென்னை–புதுச்சேரி கடல்வழி இணைப்புப் பாதை உள்ளிட்ட புதிய போக்குவரத்துத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவான்மியூர்–உத்தண்டி இடையிலான குறிப்பிட்ட உயர்மட்டப் பகுதி தனியாகத் தேவையா என்பது குறித்தும் அரசு மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், தற்போதைய திட்டத்துடன் ஏற்படக்கூடிய ஒட்டுமொத்தப் போக்குவரத்து பயன், செலவு மற்றும் தேவையை ஒப்பிட்டு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நகரில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் திட்ட மதிப்பீடுகள் தொடர்பாகவும் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு மதிப்பிடப்பட்ட தொகையைவிட அதிகமான தொகையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அவற்றின் செலவுகள் குறித்து அரசு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், திருவான்மியூர்–உத்தண்டி திட்டத்துக்கும் பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மறுஆய்வு தேவைப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நெடுஞ்சாலைத் துறையின் முந்தைய பணிகள் தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். “முந்தைய அரசிடமிருந்து வந்த 20 பணிகளுக்கு மறுடெண்டர் கோரியுள்ளோம். ஆனால், திட்ட மதிப்பை விட 20 முதல் 36 சதவீதம் வரை குறைவான ஒப்பந்தப்புள்ளிகளே கிடைத்துள்ளன. இதுபோன்ற திட்டங்களின் மதிப்பீடு, ஒப்பந்த நடைமுறை மற்றும் செலவினங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” என்று அவர் கூறினார். இதனால், திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட வழித்தடத் திட்டத்தின் எதிர்காலம் தற்போது நிபுணர் குழுவின் ஆய்வு மற்றும் அரசின் அடுத்தகட்ட முடிவைச் சார்ந்துள்ளது. திட்டம் முழுமையாக கைவிடப்படுமா, மாற்றியமைக்கப்பட்ட வடிவில் செயல்படுத்தப்படுமா அல்லது புதிய கடல்வழி இணைப்புத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தெளிவான முடிவு எதுவும் இல்லை. இதனிடையே, கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்று ஏற்பாடுகள் மற்றும் நீண்டகாலத் தீர்வுகளை அரசு எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என்பதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது..

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திருவான்மியூர் டூ உத்தண்டி... ரூ.2,100 கோடி ஈ.சி.ஆர் மேம்பாலத்துக்கு வந்தது ‘பிரேக்’; என்ன காரணம்?
PulseNews சுருக்கம்

திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த உயர்மட்ட வழித்தடப் பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.2,100 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தற்போது தற்காலிகமாகத் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த 2026-27ஆம் நிதியாண்டுக்கான கொள்கைக் குறிப்பில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணிகளின் பட்டியலில் இந்த உயர்மட்டப் பாலத் திட்டம் இடம்பெறவில்லை. இதனால் இப்பணிகள் உடனடியாகத் தொடங்குவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business