PulseNews
வணிகம்

பரந்தூர் திட்டத்தை ரத்து செய்த த.வெ.க அரசு: சென்னையின் 2-வது விமான நிலையத்தின் எதிர்காலம் என்ன?

சென்னைக்கான 2-வது சர்வதேச விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகவும், அதற்கு மாற்றாக வேறு இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 2022-ல் அப்போதைய மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசால் அறிவிக்கப்பட்ட பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி கிராம மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும் முடிவு இது. அற்ப அரசியல் லாபங்களுக்காகத் தமிழகத்தின் நலன்களை அடமானம் வைக்க முடியாது. தொலைநோக்குப் பார்வையோ, திட்டமிடலோ, ஆலோசனையோ இன்றி தவெக அரசு எடுத்துள்ள இந்த முடிவு, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளுக்கு விழுந்த பலத்த அடியாக அமையும். மேலும், அனைத்து மாற்று வழிகளையும் விரிவாக ஆய்வு செய்தே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து, பல்வேறு அனுமதிகளும் பெறப்பட்டிருந்தன. மீண்டும் ஆரம்பத்திலிருந்து புதிய இடத்தைத் தேர்வு செய்து பணிகளைத் தொடங்கினால், தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையே முடங்கிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பரந்தூர் திட்டம் எப்படித் தொடங்கப்பட்டது? சென்னையின் விமானப் போக்குவரத்து தேவைகளுக்காக இரண்டாவது விமான நிலையத்தைத் தேடும் பணி 1999-லேயே தொடங்கியது. 2007-ல் ஸ்ரீபெரும்புதூர் அருகே 4,000 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்ட போதிலும், 2013 நில எடுப்புச் சட்டம் மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2021-ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்தத் திட்டம் வேகம் பிடித்தது. படாளம், பண்ணூர், பரந்தூர் மற்றும் திருப்போரூர் ஆகிய நான்கு பகுதிகள் பரிசீலிக்கப்பட்டு, சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு பரந்தூரை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) தேர்வு செய்தன. விவசாயிகளின் தொடர் போராட்டமும் விஜயின் வாக்குறுதியும்: சுமார் ரூ.29,144 கோடி மதிப்பீட்டில், 13 கிராமங்களை உள்ளடக்கிய 5,746 ஏக்கர் பரப்பளவில் 'பசுமை விமான நிலையமாக' (Greenfield Airport) இத்திட்டம் திட்டமிடப்பட்டது. ஆனால், விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாகவும், ஒட்டுமொத்தக் கிராமங்களும் இடம்பெயர வேண்டியுள்ளதாகவும் கூறி பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் சுமார் நான்கு ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் முன்னெடுத்தனர். ஜன.2025-ல், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பரந்தூர் விவசாயிகளுக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் களத்தில் இறங்கிப் போராடினார். இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பதை வலியுறுத்தியபோதிலும், விவசாயிகளின் நிலங்களைப் பறிக்காமல் வேறு இடத்திற்குத் திட்டத்தை மாற்ற வேண்டும் என்பதைத் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக அவர் அறிவித்திருந்தார். சட்டப்பேரவையில் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பேசிய முதலமைச்சர் விஜய், புதிய விமான நிலையத்திற்குத் தேர்வு செய்யப்படும் இடம் விவசாயிகளைப் பெருமளவில் பாதிக்காத வகையிலும், அதிக அளவிலான குடியிருப்புகளை அகற்றத் தேவையில்லாத வகையிலும் இருக்க வேண்டும். புதிய மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் வரையிலான இடைக்காலத் தேவையைப் பூர்த்தி செய்ய, தற்போதைய மீனம்பாக்கம் சென்னை விமான நிலையம் கணிசமாக விரிவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் இணைந்து மீனம்பாக்கத்தின் வடமேற்குப் பகுதியில் புதிய முனையம் 5 உருவாக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 2 கோடி பயணிகள் கையாளப்படுவர். தற்போது நடைபெற்று வரும் முனையம் 3 பணிகள் முடிவடையும் போது ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளையும், முனையம் 5 அமைக்கப்பட்ட பின் ஆண்டுக்கு மொத்தம் 5.5 கோடி பயணிகளையும் கையாளும் வகையில் தற்போதைய விமான நிலையம் மேம்படுத்தப்படும். மத்திய அரசின் 2008-ம் ஆண்டு பசுமை விமான நிலையக் கொள்கையின்படி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற மாநில அரசின் டிட்கோ (TIDCO) கட்டுப்பாட்டில் உள்ள நடைமுறைகள் முடிந்தாலும், புதிய மாற்று இடத்திற்கும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் AAI-ன் கொள்கை அளவிலான ஒப்புதல் அவசியமாகும். புதிய இடத்தை தேர்வு செய்வதிலும் சாலை/ரயில் இணைப்பு, குறைந்தபட்ச இடப்பெயர்வு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் போன்ற சவால்களை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பரந்தூர் திட்டத்தை ரத்து செய்த த.வெ.க அரசு: சென்னையின் 2-வது விமான நிலையத்தின் எதிர்காலம் என்ன?
PulseNews சுருக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு மாற்றாக புதிய இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசால் இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business