PulseNews
வணிகம்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்: ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு 1, 2, 3, 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

பணம் முதலீடு செய்யும்போது அதிக ரிஸ்க் வேண்டாம், அதே நேரத்தில் நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தபால் நிலையத்தின் டைம் டெபாசிட் திட்டம் ஒரு முக்கியமான தேர்வாக உள்ளது. மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்தத் திட்டத்தில், நீங்கள் தேர்வு செய்யும் காலத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்கிறது. அப்படியானால், ரூ.5 லட்சத்தை போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டில் முதலீடு செய்தால் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளில் எவ்வளவு பணம் கிடைக்கும்? பார்க்கலாம். 1 ஆண்டு டைம் டெபாசிட் ரூ.5 லட்சத்தை 1 ஆண்டு போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டில் முதலீடு செய்தால், தற்போது ஆண்டுக்கு 6.9% வட்டி கிடைக்கும். இதன் மூலம் ஓராண்டில் சுமார் ரூ.35,403 வட்டி கிடைக்கும். அதாவது, முதிர்வு காலத்தில் உங்களுக்கு சுமார் ரூ.5,35,403 கிடைக்கும். 2 ஆண்டு டைம் டெபாசிட் 2 ஆண்டுகளுக்கான போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டில் ஆண்டுக்கு 7% வட்டி வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ.74,441 வட்டி கிடைக்கும். இதனால் முதிர்வு தொகை சுமார் ரூ.5,74,441 ஆக இருக்கும். 3 ஆண்டு டைம் டெபாசிட் 3 ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட்டில் ஆண்டுக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.1,17,538 வட்டி கிடைக்கும். இதன் மூலம் முதிர்வில் சுமார் ரூ.6,17,538 கிடைக்கும். 5 ஆண்டு டைம் டெபாசிட் நீண்ட கால முதலீட்டை விரும்புபவர்களுக்கு 5 ஆண்டு டைம் டெபாசிட் முக்கியமானதாக இருக்கிறது. இதில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.2,24,974 வட்டி கிடைக்கும். இதன் மூலம் முதிர்வு தொகை சுமார் ரூ.7,24,974 ஆக இருக்கும். எவ்வளவு முதலீடு செய்யலாம்? போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் கணக்கை குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் தொடங்கலாம். அதன் பிறகு ரூ.100-ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டாலும், ஆண்டுதோறும் வழங்கப்படும். வட்டியை போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் வரவு வைக்க, வாடிக்கையாளர் எழுத்துப்பூர்வமாக Standing Instruction அல்லது ECS Mandate வழங்கலாம். வரிச்சலுகை கிடைக்குமா? போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டில் செய்யப்படும் அனைத்து முதலீடுகளுக்கும் வரிச்சலுகை கிடையாது. 5 ஆண்டு டைம் டெபாசிட்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு மட்டுமே பழைய வருமான வரி முறையில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் வரிச்சலுகை பெறும் தகுதி உள்ளது. பாதியில் பணத்தை எடுத்தால் என்ன ஆகும்? டைம் டெபாசிட் கணக்கைத் தொடங்கிய 6 மாதங்கள் முடிவதற்கு முன்பு பணத்தை எடுக்க முடியாது. 1, 2 அல்லது 3 ஆண்டு டைம் டெபாசிட் கணக்கை 6 மாதங்களுக்குப் பிறகு, ஆனால் ஒரு ஆண்டுக்குள் முடித்துவிட்டால், முடிந்த மாதங்களுக்கான வட்டி போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தில் கணக்கிடப்படும். 2 அல்லது 3 ஆண்டு டைம் டெபாசிட்டை ஒரு ஆண்டுக்குப் பிறகு முன்கூட்டியே முடித்தால், முடிந்த ஆண்டுகளுக்கான வட்டி, பொருந்தக்கூடிய டைம் டெபாசிட் வட்டி விகிதத்தைவிட 2% குறைவான விகிதத்தில் கணக்கிடப்படும். ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்துக்கு சேமிப்புக் கணக்கு வட்டி விகிதமே பொருந்தும். 5 ஆண்டு டைம் டெபாசிட்டை 4 ஆண்டுகள் முடிவதற்கு முன்பு மூட முடியாது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை மூடினால், போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தில் வட்டி வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட வட்டி இருந்தால், அது திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையில் இருந்து கழிக்கப்படும். ரூ.5 லட்சம் முதலீட்டில் என்ன வித்தியாசம்? காலம் அதிகரிக்கும்போது வட்டி விகிதமும் உயர்வதால், நீண்ட கால டைம் டெபாசிட்டில் கிடைக்கும் மொத்த வட்டியும் அதிகமாகிறது. 1 ஆண்டு முதலீட்டில் சுமார் ரூ.35,403 வட்டி கிடைக்கும் நிலையில், 5 ஆண்டு முதலீட்டில் சுமார் ரூ.2.25 லட்சம் வட்டி கிடைக்கிறது. எனவே, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்கள் தங்களுக்கு பணம் தேவைப்படும் காலம், வட்டி வருமானம் மற்றும் வரிச்சலுகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் காலத்தைத் தேர்வு செய்வது முக்கியம். குறிப்பு: மேலே கொடுக்கப்பட்ட முதிர்வு தொகைகள் தோராயமான கணக்கீடுகள். முதலீடு செய்வதற்கு முன் அன்றைய அதிகாரப்பூர்வ வட்டி விகிதம் மற்றும் விதிமுறைகளை சரிபார்க்கவும்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்: ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு 1, 2, 3, 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
PulseNews சுருக்கம்

குறைந்த ஆபத்தில் நிலையான வருமானம் பெற விரும்புபவர்களுக்கு தபால் நிலையத்தின் டைம் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக உள்ளது. மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் காலத்தைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன.

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிலும் மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்கிறது. இந்தத் திட்டத்தில் ரூ.5 லட்சத்தை 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என முதலீடு செய்யும்போது கிடைக்கும் வருமானம் குறித்த விவரங்கள் முதலீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business