PulseNews
வணிகம்

பயமா? பதற்றமான? 11 மதுபானங்கள் மீதான தடை நீக்கம் குறித்து அ.தி.மு.க கேள்வி

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்னை பூந்தமல்லி அருகே அமைந்துள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 11ஆம் தேதி என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமம் பெற்ற வளாகத்தில் FSSAI என அழைக்கப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த ஆய்வில், குறிப்பிட்ட மதுபானங்களில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியபட்டது. இதையடுத்து, அந்த தயாரிப்புகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த FSSAI அமைப்பு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், என்ரிகா நிறுவனத்தின் 11 பிராண்டுகளையும் டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து Retail Vending கடைகளுக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்தவும், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்றவர்களுக்கு அவற்றை விற்பனை செய்வதை நிறுத்தவும் அனைத்து மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள், டிப்போ மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை இந்த நிறுவனத்தின் 11 பிராண்டுகளையும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் இருந்து நேற்று விற்பனை செய்யப்படவில்லை. இந்த நிலையில், என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த தடையை நீக்கி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. FSSAI மீண்டும் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மதுபானங்கள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் தடை விதிக்கப்பட்டதும், பின்னர் அந்த தடை நீக்கப்பட்டதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க கேள்வி இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கப்பட்டது பற்றி அ.தி.மு.க‌ ஐ.டி விங் கேள்வி எழுப்பி இருக்கிறது. இது குறித்து சமூக வலைதள பக்கத்தில்"கொடுத்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது முதல்வர் விஜய், அமைச்சர் விக்னேஷ்? பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா? என்னவா இருக்கும்?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறது. கே.சி பழனிசாமி கேள்வி அ.தி.மு.க முன்னாள் எம்.பி‌ கே.சி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில், "டாஸ்மாக்கில் 24 மணிநேரத்தில் நடந்த "தடை" மாயம்! - பின்னணியில் ஊழலா? உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய சோதனையில், டாஸ்மாக்கில் விற்பனையாகும் 'என்ரிகா என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் VSOP Exshaw gold, Honey Bee Fine, MENSCLUB Deluxe உள்ளிட்ட 10 வகை பிராந்திகள் மற்றும் ஒரு ரம் என மொத்தம் 11 மதுபானங்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் "செயற்கை சுவையூட்டிகள்" கலக்கப்படுவது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி இந்த 11 மதுபானங்களை விற்க டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்தது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால்... வெறும் 24 மணி நேரத்திற்குள் அந்தத் தடை சத்தமில்லாமல் நீக்கப்பட்டுள்ளது! 1. ஒரே இரவில் அந்த மதுபானங்களின் தரம் எப்படி உயர்ந்தது? 2. மக்கள் உயிரோடு விளையாடும் இந்த விவகாரத்தில், அவசர அவசரமாகத் தடை நீக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பது பெருமளவு ஊழலா? 3. ஊழல் இல்லை என்றால், தடையை நீக்க வேண்டிய கட்டாயம் என்ன? மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை (Prohibition and Excise Department) மற்றும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மௌனம் கலைத்து, பொதுமக்களுக்கு உடனடியாக பகிரங்க விளக்கம் அளிக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பயமா? பதற்றமான? 11 மதுபானங்கள் மீதான தடை நீக்கம் குறித்து அ.தி.மு.க கேள்வி
PulseNews சுருக்கம்

சென்னை பூந்தமல்லி அருகே செயல்படும் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனம், டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை விநியோகம் செய்து வருகிறது. கடந்த 11-ம் தேதி இந்த நிறுவனத்தின் வளாகத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மேற்கொண்ட ஆய்வில், அங்குள்ள குறிப்பிட்ட மதுபானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக செயற்கை சுவையூட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த மதுபானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், விற்பனைக்கு தடை செய்யப்பட்ட அந்த 11 வகை மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை மீண்டும் நீக்கியது ஏன் என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business