அரசு ஊழியர்களின் இடைக்கால உதவித்தொகையில் மாற்றம்...! - தமிழக அரசின் புதிய உத்தரவு வெளியீடு
தமிழக அரசு ஊழியர்களுக்கான இடைக்கால உதவித்தொகை மற்றும் குடும்ப உதவித்தொகையில் அகவிலைப்படி நிவாரணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்றவர்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பணிநிறைவுக்குப் பின்னர் உயிரிழந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தகுதியான அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட விதிகளின்படி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசாணையில், ஏற்கனவே கடந்த ஜூன் 16-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த உத்தரவின்படி, தகுதியான அரசு ஊழியர்களுக்கு கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்த தொகையுடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 6-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெற்று 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிவாரண விகிதம் 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக சம்பளம் பெற்று, 7-வது ஊதியக்குழுவிற்கு மாற்றப்படாத அரசு ஊழியர்களுக்கு புதிய நடைமுறை பொருந்தும். இவர்களின் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் இருந்தால், அதனுடன் 262 சதவீத அகவிலைப்படி நிவாரணம் வழங்கப்படும்.அதேவேளை, 30 சதவீத அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால், இடைக்கால உதவித்தொகையின் குறைந்தபட்ச தொகை ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு, அதனுடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணம் வழங்கப்படும். 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெற்று வந்த அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால உதவித்தொகை மற்றும் குடும்ப உதவித்தொகையில் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணம் மட்டுமே கணக்கிடப்படும்.புதிய விதிகளின்படி உதவித்தொகைகளை கணக்கிட்டு வழங்கும் பணியை கருவூலக் கணக்கு ஆணையர் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான இடைக்கால உதவித்தொகை மற்றும் குடும்ப உதவித்தொகையில் அகவிலைப்படி நிவாரணத்தை மாற்றியமைத்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் பணி ஓய்வு பெற்றவர்கள், பணிக்காலத்திலும் அல்லது ஓய்வுக்குப் பின்னரும் உயிரிழந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு, திருத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்.