மேட்டூர் அணை எப்போது திறப்பு...? காவிரி நீருக்காக பிரதமரை சந்திக்க வேண்டும்...! - பெ.சண்முகம்
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்குவதற்கு ஏதுவாக, மேட்டூர் அணை திறக்கப்படும் தேதியை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,"டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை தொடங்க வேண்டிய நிலையில், மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய காவிரி நீர் உரிய அளவில் வந்து சேரவில்லை. இதனால் டெல்டா விவசாயிகளின் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் உரிமையான காவிரி நீரை பெற்றுத்தருவதற்காக தமிழக முதலமைச்சர் ஏற்கனவே சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அடுத்தகட்டமாக அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்துக்குரிய நீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில், தன்னிடம் 3 முக்கிய கோப்புகள் இருப்பதாக முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். அவரது கைவசம் உள்ள அந்த கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில் கருத்துகளை தெரிவிப்பது அரசியல் ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் சரியான அணுகுமுறை அல்ல.சவுதி அரேபியாவில் உயிரிழந்த சீர்காழியை சேர்ந்த மீனவர்களின் உடல்களை எவ்வித தாமதமும் இன்றி அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துயரத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் உடல்களை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வந்து இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்.இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்குவதற்கு ஏதுவாக, மேட்டூர் அணை திறக்கப்படும் தேதியை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விவசாயிகளின் நலன் கருதி இந்த அறிவிப்பு மிக அவசியம் என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், காவிரி நீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக உள்ளது.