பாலி தீவு பரப்பளவு கொண்ட பிரமாண்ட பனிப்பாறை காலி: 40 ஆண்டுகளில் அண்டார்டிகா பனிப்பாறை உருகி மறைந்தது எப்படி?
சுமார் 40 ஆண்டுகளாக அண்டார்டிகா, தென் பெருங்கடல் பகுதிகளில் மிதந்து வந்த, ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாகக் கருதப்பட்ட ‘A23a’ தற்போது கிட்டத்தட்ட முழுமையாக உருகி மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ராட்சதப் பனிப்பாறை 1986-ம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிப்பாறைப் பகுதியிலிருந்து (Filchner Ice Shelf) உடைந்து உருவானது. பின்னர் 1991-ல் ‘A23’ என்ற பெரிய பனிப்பாறையிலிருந்து பிரிந்த பிறகு, இதற்கு ‘A23a’ எனப் பெயரிடப்பட்டது. அதன் உச்சக்கட்ட பரப்பளவின்போது சுமார் 2000 சதுர மைல்கள் (இந்தோனேசியாவின் பாலி தீவின் பரப்பளவு) அளவுக்கு பரந்து விரிந்திருந்தது. நேஷனல் ஜியாகிரபிக் அறிக்கையின்படி, இதன் அடிப்பகுதி கடலின் தரைப்பகுதியில் சிக்கியிருந்ததால் பல தசாப்தங்களாக வெட்டல் கடலில் (Weddell Sea) நகர முடியாமல் ஒரே இடத்தில் சிக்கியிருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு, 2020-ல் இந்த பனிப்பாறை மெதுவாக நகரத் தொடங்கியது. கடல் நீரோட்டங்களால் அடித்துச்செல்லப்பட்டு, 2023 நவம்பரில் தென் பெருங்கடலின் திறந்தவெளிப் பகுதியை அடைந்தது. அப்போது, உலகிலேயே நகரும் மிகப்பெரிய பனிப்பாறை என இது விவரிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் பனி ஆய்வாளர் ஜான் லீசர் (Jan Lieser) உள்ளிட்ட பல சர்வதேச விஞ்ஞானிகள் இதன் பயணத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். திறந்தவெளி பெருங்கடலை அடைந்த பிறகு எதிர்பாராத திருப்பமாக, மார்ச் 2024-ல் டெய்லர் காலம் (Taylor column) என்ற சக்திவாய்ந்த கடல் சுழலில் இது சிக்கிக்கொண்டது (கடலுக்கு அடியில் உள்ள மலைகள் நீரோட்டத்தைத் தடுக்கும் போது உருவாகும் சுழற்சி). இதனால் ஒரே இடத்தில் சுமார் 8 மாதங்கள் சுற்றி வந்த A23a, நவம்பர் 2024-ல் அந்த சுழலில் இருந்து விடுபட்டது. அதன்பின், ஒப்பீட்டளவில் வெப்பமான கடல் பகுதிக்குள் நுழைந்ததால் இதன் பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கின. மார்ச் 2025-ல் தென் ஜார்ஜியா தீவிலிருந்து சுமார் 70 மைல் தொலைவில் மீண்டும் சிறிது காலம் சிக்கியது. ஆவணப்பட தயாரிப்பாளர் ஜெரோம் பவுவியர் (Jerome Bouvier) இந்த பனிப்பாறையைப் படம்பிடித்தபோது, இது எல்லையே இல்லாத ஒரு பிரமாண்டச் சுவர் போலவும், குகைகள் நிறைந்ததாகவும் காட்சியளித்தது. பனிப்பாறைப் பாறைகள் சரிந்து விழுந்துகொண்டே இருந்தன. இக்குழுவினர் படம்பிடித்தபோது A23a சுற்றி திமிங்கலங்கள், பெங்குவின்கள், கடல் பறவைகள், சிறுத்தை சீல்கள் (leopard seals) மற்றும் பனி பெட்ரெல்கள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் சூழ்ந்திருந்தன. அண்டார்டிகாவின் ஒரு துண்டு, அங்கு வாழும் அனைத்து உயிரினங்களை தன் கப்பலில் ஏற்றிக்கொண்டு நகரும் தீவு போல நம்மை நோக்கி வந்தது போல் இருந்தது" என்று பவுவியர் வியப்புடன் தெரிவித்தார். 1986-ல் அண்டார்டிகாவிலிருந்து இந்த பனிப்பாறை உடைந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த துருஷ்னயா 1 (Druzhnaya 1) என்ற சோவியத் ஆராய்ச்சி நிலையமும் இதனுடன் அடித்துச் செல்லப்பட்டது. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் இதன் அருகே கண்ட பழைய பீப்பாய்கள் மற்றும் சேமிப்புத் தொட்டிகள் அந்த பழைய சோவியத் நிலையத்தின் எச்சங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஜூன் 2025-ன் பரப்பளவு 1,200 சதுர மைல்களுக்கும் குறைவாகக் குறைந்ததால், உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்ற அந்தஸ்தை இழந்தது. ஜன.2026-ல் செயற்கைக்கோள் படங்களில் பனிப்பாறையைச் சுற்றி பச்சையத்தின் (chlorophyll) பரவல் காணப்பட்டது. மார்ச் 2026-ல் அமெரிக்க தேசிய பனி மையம் இதன் அளவு பனிப்பாறைக்கான குறைந்தபட்ச வரம்பை விட மிகச் சிறியதாகக் குறைந்ததால் இதன் அதிகாரப்பூர்வ கண்காணிப்பை நிறுத்தியது. மார்ச் - மே 2026-ல் செயற்கைக்கோள் படங்களில் A23a பல சிறிய துண்டுகளாக உடைந்து தென் பெருங்கடலில் பரவியது தெரிந்தது. மே மாத வாக்கில் விண்வெளியில் இருந்து இதன் மிகச்சிறிய துண்டுகள் மட்டுமே தென்பட்டன. சுமார் 4 தசாப்தங்களாக அண்டார்டிகா கடலில் பல்லுயிர் சூழலுக்குப் புகலிடமாக விளங்கிய பிரமாண்ட A23a பனிப்பாறை, தற்போது வெப்பமயமாதல் மற்றும் கடல் நீரோட்டங்களால் முழுமையாக உருகி தனது பயணத்தை முடித்துக்கொண்டுள்ளது.

சுமார் 40 ஆண்டுகளாக அண்டார்டிகா மற்றும் தென் பெருங்கடல் பகுதிகளில் மிதந்து வந்த, உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான 'A23a' தற்போது முழுமையாக உருகி மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பாலி தீவின் பரப்பளவிற்கு நிகரான பிரம்மாண்டமான இந்த பனிப்பாறை, 1986-ம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிப்பாறைப் பகுதியிலிருந்து பிரிந்து உருவானது.
பின்னர் 1991-ம் ஆண்டு 'A23' என்ற பெரிய பனிப்பாறையிலிருந்து தனித்துப் பிரிந்த நிலையில், இதற்கு 'A23a' எனப் பெயரிடப்பட்டது. சுமார் 2000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டிருந்த இந்த ராட்சத பனிப்பாறை, கடந்த நான்கு தசாப்தங்களாகக் கடலில் மிதந்து வந்த நிலையில் தற்போது கரைந்து மறைந்துள்ளது.