PulseNews
தொழில்நுட்பம்

40 கி.மீ வேகம், 80 அடி உயரம்: ஆற்றுக்குள் தலைகீழாகப் பாயும் கடல் அலைகள்; சீனாவில் அதிசயம்

ஆறுகள் மலையில் தோன்றி கடலில் கலப்பதுதான் இயற்கை விதி. ஆனால், சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள கியான்டாங் (Qiantang) ஆற்றில், கடல் நீர் ஆற்றுக்குள் பின்னோக்கிப் பாயும் அபூர்வ நிகழ்வு விஞ்ஞானிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கடலிலிருந்து எழும் ராட்சத அலைகள், ஆற்றின் இயல்பான ஓட்டத்தை எதிர்த்து, சீறிக்கொண்டு மேல்நோக்கிப் பாயும் நிகழ்வை அறிவியல் ரீதியாக ‘டைடல் போர்’ என்று அழைக்கின்றனர். இதன் பிரம்மாண்டத் தோற்றம் காரணமாக உள்ளூர் மக்கள் இதனை ‘வெள்ளி டிராகன்’ (Silver Dragon) என்று வர்ணிக்கின்றனர். இந்நிகழ்வு தற்செயலானது அல்ல; இதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான புவியியல் மற்றும் விண்வெளி காரணங்கள் கியான்டாங் ஆறு கடலில் கலக்கும் இடம் ஒரு புனல்போல அகலமாக ஆரம்பித்து உள்நோக்கிச் செல்லச் செல்ல மிகவும் குறுகலாகிறது. இதனால் கடலிலிருந்து வரும் நீர் ஒரு குறுகிய பாதையில் நெருக்குண்டு மிகுந்த வேகத்துடன் ஆற்றுக்குள் நுழைகிறது. நிலவு மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தி இணையும் காலங்களில், கடல் அலைகளின் வேகம் மற்றும் அழுத்தம் அதிகரித்து இந்த நிகழ்வு இன்னும் தீவிரமாகிறது. இந்த 'வெள்ளி டிராகன்' அலைகள் சாதாரணமானவை அல்ல. ஆய்வாளர்களின் கூற்றுப்படி இந்த அலைகள் 80 அடி உயரம் வரை எழும்பக் கூடியவை. மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் இவை ஆற்றுக்குள் சீறிப்பாய்கின்றன. அலைகள் வருவதற்கு முன்பே பல கிலோமீட்டர் தூரத்திற்கு இடி முழக்கம் போன்ற சத்தம் கேட்கும். ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இந்த நிகழ்வு அரங்கேறினாலும், இலையுதிர் காலத்தில் நிலவு மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது இது மிகவும் சக்திவாய்ந்ததாகக் காணப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த அதிசயத்தைக் காண ஹாங்சோ நகருக்கு வருகை தருகின்றனர். பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டாலும், இயற்கையின் இந்த விசித்திரமான பேராற்றலை நேரில் காண்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளதாகப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். பூமியின் புவியியல் அமைப்பும் விண்வெளி சக்திகளும் இணையும் போது உருவாகும் இந்த 'வெள்ளி டிராகன்', இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் அதிசயமாக இன்றும் திகழ்கிறது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
40 கி.மீ வேகம், 80 அடி உயரம்: ஆற்றுக்குள் தலைகீழாகப் பாயும் கடல் அலைகள்; சீனாவில் அதிசயம்
PulseNews சுருக்கம்

சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள கியான்டாங் ஆற்றில் கடல் நீர் பின்னோக்கிப் பாயும் அபூர்வ இயற்கை நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடலில் இருந்து எழும் ராட்சத அலைகள் ஆற்றின் ஓட்டத்திற்கு எதிராக 80 அடி உயரத்திற்கு, மணிக்கு 40 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அறிவியல் ரீதியாக ‘டைடல் போர்’ (Tidal Bore) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வை, உள்ளூர் மக்கள் ‘வெள்ளி டிராகன்’ (Silver Dragon) என்று அழைக்கின்றனர். இந்த பிரம்மாண்டமான காட்சியை விஞ்ஞானிகளும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு வருகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology